சனி, 24 செப்டம்பர், 2022

3 ஆயிரம் கோடி மதிப்பில் ஒரு குறுங்காடு: அசத்தும் நெல்லை இளைஞர்கள்

 3 ஆயிரம் கோடி மதிப்பில் ஒரு குறுங்காடு: அசத்தும் நெல்லை இளைஞர்கள்

Miyawaki forest: The Successful Story of Tirunelveli environment movement

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுச்சுழல் சார்ந்து தீவிர செயற்பாட்டை மேற்கொண்டு வரும் அமைப்புகளில் வி.எம்.சத்திரம் டேவலப்மெண்ட் ட்ரஸ்ட் ஒன்று. அப்பகுதியின் இளைஞர்களும், சிறுவர்களும் இந்த அமைப்பின் தூண்காளாக இருந்து வருகின்றனர். வேறு சில ஊர்களிலும் இந்த அமைப்பை ஒரு முன்மாதிரியாக வைத்து, வேறு சில அமைப்புகளும் உருவாகியிருக்கிறது.

இந்த அமைப்பு மற்றும் குறுங்காடு வளர்ப்புத் திட்டம் ஆரம்பித்து ஓராண்டு கொண்டாட்டத்தை மேற்கொண்டு வரும் வி.எம்.சத்திரம் டேவலப்மெண்ட் ட்ரஸ்ட் உறுப்பினர் மகாராஜா அவர்களுடன் இதுகுறித்து கேட்டோம்.


குறுங்காடுனா என்ன? இவ்வளவு சின்ன இடத்துல ஏன் இப்படி அதிக மரங்கள் வளர்க்குறீங்கனு? அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், இதை மியாவாக்கி சொல்லுவாங்க. அதாவது மிகக் குறைந்த இடத்துல அதிக மரங்கள நடுறது. ஜப்பான்ல இது பிரபலம். நகரத்தில மிகக் குறைந்த அளவே மரங்கள் நடுறதுக்கு இடங்கள் இருக்கும், அந்த இடத்துல அதிகளவு மரங்கள் நடுவதற்கு கொண்டு வரப்பட்ட முறைதான் குறுங்காடு.

எங்களோட அமைப்பு மற்றும்  திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தோட நெல்லை நீர்வளம் அமைப்பு இணைந்து, வி.எம். சத்திரம் மூர்த்தி நயினார் குளம் வடக்கு மேற்கு கரையில் 5040 அடியில் 151 வகையான மரங்களை குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் வளர்க்கிறோம்.

குறுங்காடு வளர்க்கணுங்கிற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

எங்க அமைப்போட முக்கிய நோக்கமே சுற்றுச்சுழல் மற்றும் பல்லூயிர்களை பாதுகாக்குறதுதான். அமைப்பு ஆரம்பிக்கும் போது,  இணையத்துல குறுங்காடு பத்தி படிச்சிறுக்கோம். அதுமட்டும் இல்லாம சேவை சுற்றுலாக்கு அடிக்கடி போவோம்.

சேவை சுற்றுலானா’ எங்கள மாதிரி சமூக சேவை செய்யுறவுங்கள சந்திச்சு, அவுங்க என்ன பண்றாங்க, அவுங்க பண்ற செயல்பாடுகள்ல நம்ம பகுதிக்கு எது ஒத்துவரும் இப்படி நிறைய விஷயங்களை பார்ப்போம்.

அப்போதான் நண்பர் ஒருத்தர் மூலமாக, கோபாலசமுத்திரத்த சேர்ந்த எக்பவுண்டேசன் நிவேக் அறிமுகமானார். நிவேக் அவரோட பகுதியில குறுங்காடு வளர்ந்துட்டு இருந்தார். அவர்தான், குறுங்காடு எப்படி வளர்க்கணும் ஐடியா சொல்லி எங்களுக்கு ஊக்கம் கொடுத்தார்.

மேலும் மாநகராட்சி சார்பாக, ராமையன்பட்டில குறுங்காடு வளர்த்தாங்க. அதையும் நேர்ல சென்று பார்த்தோம். அதுபோக மியாவாக்கி மாரியப்பன், அரண் அமைப்பைச் சேர்ந்த கார்த்தி ஆகியோர்ட்ட ஆலோசனை கேட்டோம்.

பிறகுதான் நாமளும், நம்ம பகுதியில குறுங்காடு ஆரம்பிக்கலாம் முடிவு பண்ணோம். வட்டாட்சியர் செல்வன் அவர்கள சந்திச்சு விஷயத்த சொன்னோம். அவரும் எங்களுக்கு நல்ல ஊக்கம் கொடுத்து ஆதரவு தந்தாங்க.

பின்னர் கலெக்டர் விஷ்ணுவை சந்திச்சு, மியாவக்கி காடு உருவாக்க போறோம், அனுமதி தாங்கணு கோரிக்கை வச்சோம். சாரும், மாநகராட்சி ஆணையர்கிட்ட பேசி உடனே அனுமதி கொடுத்தாங்க. இந்த குறுங்காட்ட துவக்கி வச்சாங்க.

குறுங்காடு வளர்ப்புத் திட்டம் உருவாகுறதுக்கு யாரெல்லாம் உதவி பண்ணுனாங்க?

குறுங்காடு வளர்ப்புத் திட்டம் உருவாகுறதுக்கு பின்னாடி பலரோட பங்களிப்பு இருக்கு. குறிப்பா நெல்லை நீர்வளம் அமைப்பு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, வட்டாட்சியர் செல்வன், தற்போதைய துணைமேயர் கே.ஆர்.ராஜு, அப்போதைய மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரன், வட்டாசியர் ஆவுடையப்பன் மற்றும் எங்களோட பகுதியைச் சார்ந்த சுழல் மேல அக்கறை கொண்ட நிறைய நல்ல உள்ளங்கோட பங்களிப்பு இந்த குறுங்காட்டுல இருக்கு.

குறுங்காடு வளர்ப்புத் திட்டத்தோட மதிப்பு என்ன?

5040 அடியில் 151 வகையான மரங்கள்- குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் வளர்க்கும் இளைஞர்கள்

இந்த குறுங்காடு, 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உள்ளது சொன்னா உங்களால நம்ப முடியுமா?  ஆனால் உண்மையாகவே, இதோட மதிப்பு 3 ஆயிரம் கோடி ரூபாய்.

ஒரு மரம் என்பது விலை மதிப்பில்லாதது. அதன் உண்மையான மதிப்பை உணர்ந்து கொள்ள பொருளாதார ரீதியில் அல்லது பணம் அடிப்படையில் அதை மதிப்பிட வேண்டி இருக்கிறது..

மரங்கள் தரும் சேவைகளை மதிப்பிட்ட சில ஆராய்ச்சி முடிவுகள பார்க்கும் போது 2 வளர்ந்த மரங்கள், ஒரு நபருக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன.

அந்த வகையில் ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு ஆண்டுக்கு ரூ. 23 கோடி ரூபாய் ஆகும். இந்த தரவுகள் அடிப்படையில் நமது குறுங்காட்டில் இருக்குற 151 மரங்கள் ஆண்டுக்கு ரூபாய் 3473 கோடி ரூபாய் அளவிற்கு பலன் தரக்கூடியது.

இந்த குறுங்காடு உருவாகுறதுக்கு பின்னாடி பலரோட பங்களிப்பு இருக்கு- சமூக ஆர்வலர் மகாராஜன்

குறுங்காடு வளர்ப்புத் திட்டத்துல என்னென்ன வகையான மரங்கள் வளர்க்குறீங்க?

இந்த பகுதியோட தட்ப வெப்ப சுழ்நிலைக்கு ஏற்ற நாட்டு மரங்கள், அழிவு நிலையில் இருக்கக்கூடிய மரங்களை தேர்ந்தெடுத்து, வளர்த்துட்டு வர்றோம். குறிப்பாக வேம்பு, புங்கை, பூவரசு உள்ளிட்ட 151 வகையான மரங்கள் வளர்க்குறோம்.

மியாவாக்கி முறை இந்தியாவுக்கு ஒத்து வராதுணு சில சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் சொல்லுறாங்களே. அதைபத்தி உங்களோட கருத்து என்ன?

அதுபத்தி சரியாக எனக்கு தெரியல. ஆனா இந்த குறுங்காட்டாலதான் எங்களோட பகுதியில், பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கு. இதை நாங்க வெறும் குறுங்காடா மட்டும் பாக்கல. எங்களோட ஊரோட அடையாளமா பாக்குறோம். சூழல் மேல ஆர்வம் கொண்டவர்கள் ஒன்று கூடுறதுக்கான தளமாக பாக்குறோம். எங்க பகுதியில் உள்ள  குளங்கள் தூர்வாருவதற்கான தூண்டுகோலாக இந்த குறுங்காடு தான் இருக்குது.

அமைப்போட உறுப்பினர்கள் இதற்காகவே தினமும் ஒரு மணிநேரம் நேரம் ஒதுக்கி, குறுங்காட்ட பராமரிக்கிறோம். விடுமுறை நாட்கள்ல இப்பகுதி சிறுவர்கள் இங்க வாராங்க. சுற்றுச்சுழல பத்தி விவாதிக்குறாங்க.

அருகிலுள்ள தனியார்பள்ளி மாணவர்கள் குறுங்காட்ட வந்து பார்வையிட்டு விழிப்புணர்வு பெற்று போறாங்க.

இப்போ குறுங்காட்டுல பலவிதமான பறவைகள், பூச்சிகள் உள்ளிட்ட பல்லூயிர்கள் வர்றத பார்க்க முடியுது. இது எங்களுக்கு ரொம்ப மனநிறைவா இருக்கு.

குறுங்காட்டை பார்வையிடும் தனியார் பள்ளி மாணவர்கள்

எங்க பகுதியில உள்ள சூழல மேம்படுத்த மரவங்கி திட்டம், தாய்மடி திட்டம் , வீதிதோறும் மரம் வளர்க்கும் திட்டம், பனை வளர்ப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள செயல்படுத்திட்டு வர்றோம். அதற்கு அச்சாணியாக இருப்பது இந்த குறுங்காடுதான்.

குறுங்காடு வளர்ப்புத் திட்டம் எப்போது ஆரம்பிச்சிங்க? யாரு தொடங்கி வச்சாங்க?

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ், தனி வட்டாட்சியர் செல்வன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆவுடையப்பன்,  மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.ராஜு ஆகியோர் 11/09/2021 அன்று குறுங்காடு வளர்ப்புத் திட்டத்த துவக்கி வச்சாங்க.

அவுங்க துவங்கி வச்சபோது எல்லாம் மரக்கன்றுகளா இருந்துச்சி. இப்போ எல்லாம் பெரிய மரமா ஆகிடுச்சி. பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு.

சுழல் மேல ஆர்வம் கொண்ட நாலு பேரும், நல்ல உள்ளம் கொண்டவர்களும் இணைந்தால் இந்த உலகில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரலாம்”  என்று கூறி இந்த நேர்காணலை நிறைவு செய்தார் சமூக ஆர்வலர் மகாராஜன்.

குறுங்காட்டில் இருக்குற 151 மரங்கள் ஆண்டுக்கு ரூபாய் 3473 கோடி ரூபாய் அளவிற்கு பலன் தரக்கூடியது

நேர்காணலை நிறைவுசெய்து கிளம்பும்பொழுது இந்த பகுதியின் அடையாளமாக குறுங்காடு மாறி இருப்பதற்கான ஆதாரமாக ஒரு நிகழ்வு நடந்தது.

ஒருபெண்மணி  அந்த பகுதியில் உள்ள சிலரிடம் “இங்க குறுங்காடு எங்க இருக்கு, அதுபக்கதுல உள்ள டெயிலர் கடைக்கு போணும். குறுங்காடு எங்க இருக்கு கேட்டா எல்லாரும் சொல்லுவாங்கனு சொன்னாங்க“ என்ற அந்த உரையாடலை கேட்டுக்கொண்டே குறுங்காட்டில் இருந்து விடைபெற்றோம்.

உதவி: சுரேஷ் மந்திரம், உதவி பேராசிரியர், காட்சி தொடர்பியல் துறை, காமராஜர் கல்லூரி, தூத்துக்குடி  


source https://tamil.indianexpress.com/lifestyle/miyawaki-forest-the-successful-story-of-tirunelveli-environment-movement-515032/