வியாழன், 29 செப்டம்பர், 2022

5 மடங்காக விரிகிறது சென்னை பெருநகரம்: புதிதாக இணையும் பகுதிகள் எவை?

 28 09 2022

Chennai Tamil News: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) தற்போது 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள நகரை மையம், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் (சென்னை பெருநகரப் பகுதி மத்திய மையப் பகுதி, சென்னை பெருநகரப் பகுதி வடக்கு மற்றும் சென்னை பெருநகரப் பகுதி தெற்கு) என மூன்றாகப் பிரிக்க முன்மொழிந்துள்ளது.

முந்தைய அதிமுக அரசு, சி.எம்.டி.ஏ.வை 1,189 சதுர கிலோ மீட்டரில் இருந்து 8,878 சதுர கிலோ மீட்டராக உயர்த்தி, நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக மாற்ற திட்டமிட்டது. ஆனால், தற்போது தமிழக அரசு அத்திட்டத்தை மறுசீரமைக்கவும், நகரின் பெரும் பகுதியை 5,904 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளது.

செப்டம்பர் 27ஆம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நடைபெறவிருந்த சி.எம்.ஏ விரிவாக்கம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், பூஜை விடுமுறைக்குப் பிறகு (அக்டோபர் 4 மற்றும் 5) நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தில், விரிவாக்கப்பட்ட பகுதிகளை உள்ளடங்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களையும், 2,908 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட எட்டு தாலுகாக்களைக் கொண்டது சென்னை பெருநகரப் பகுதி வடக்கு.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், திருப்போரூர், குன்றத்தூர் மற்றும் வண்டலூர் தாலுகாக்ககள் சென்னை பெருநகரப் பகுதி தெற்கில் உள்ளடங்கும்.

சென்னை பெருநகர திட்டமிடல் பகுதி விரிவாக்கத்தின் அவசியத்தை சி.எம்.டி.ஏ. முதலில் நியாயப்படுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக நகர்ப்புற பொறியியல் துறை முன்னாள் பேராசிரியர் கே.பி.சுப்பிரமணியன் கூறினார். “நிபுணர் உள்ளீடு மற்றும் பொது ஆலோசனையுடன் இந்த திட்டத்தை முடிவு செய்ய அவர்கள் ஒரு சிறந்த குழுவை தேர்ந்தெடுக்க வேண்டும்”, என்று கூறுகிறார்.

மேலும், “சிஎம்டிஏவால் சில சட்டப்பூர்வ திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. இந்த திட்டம் நகர்ப்புற விரிவாக்கத்துடன் கண்மூடித்தனமாக வளமான விவசாய நிலங்களை இணைத்தால், இது சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும்” என்று முன்னாள் பேராசிரியர் கூறுகிறார்.

தொழில்சார் நகரத் திட்டமிடுபவர்கள் சங்கத்தின் (APTP) தலைவர் கே.எம். சதானந்த், சென்னையை மூன்றாகப் பிரிப்பது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார். சென்னை பெருநகரப் பகுதியை சீராக ஆய்வு செய்து பின்னர் விரிவாக்கம் செய்ய வேண்டும். “இவ்வளவு பெரிய பகுதியை எப்படி நிர்வகிக்க முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு சில ஏஜென்சிகள் மட்டும் அல்ல, கிட்டத்தட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்,” என்றார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-metropolis-about-to-expand-here-are-the-new-connecting-areas-517629/