செவ்வாய், 27 செப்டம்பர், 2022

புதுச்சேரியில் அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

 26 09 2022

புதுச்சேரியில் தமிழக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா , நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக இன்று காலை முதல் நகரின் அனைத்து டீக்கடை முதல் எந்தவித பெரிய கடைகள் வரை எதுவும் திறக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள் மற்றும் டெம்போக்கள் இயங்கவில்லை. ஒரு சில புதுச்சேரி அரசு மற்றும் தமிழக அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. பெரிய மார்க்கெட்டான குபேர் அங்காடி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து அங்காடிகளும் மூடப்பட்டுள்ளது.

அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் நகர் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகளாக நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பந்த் போராட்டம் காரணமாக புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த இரண்டு தமிழக அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. வில்லியனூர் அரும்பார்த்தபுரம் பகுதி அருகே பேருந்துகள் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து விட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வில்லியனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


source https://news7tamil.live/full-blockade-strike-in-puducherry-government-bus-glass-broken.html