புதன், 28 செப்டம்பர், 2022

கோவையில் பா.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டம் மூலம் கோவை அமைதியாக இருக்க விரும்பவில்லை என்பது தெரிகிறது.

 27 09 2022

ஸ்டாலினை மிரட்டும் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

மாநில முதல்வரை மற்றும், தமிழக காவல்துறையை மிரட்டும் வகையில் ஒரு பேட்டை ரவுடியை போல அண்ணாமலை  பேசுகின்றார் என்று மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

கோவையை பதட்டமான இடமான  மாற்றி  விடக்கூடாது. கோவையில் பா.ஜ.க நடத்திய  ஆர்ப்பாட்டம் மூலம் கோவை அமைதியாக இருக்க ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க விரும்பவில்லை என்பது தெரிகிறது.. நேற்றைய கூட்டத்தில் மாநில முதல்வரை மிரட்டும் விதமாக பேசிய அண்ணாமலை  பேசுகின்றார், தமிழக காவல் துறையை மிரட்டுகின்றார், பேட்டை ரவுடியை போல பேசுகின்றார்  இதன் மூலம் 356 பிரிவை பிரகடனம்படுத்தி ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர  திட்டமிடுகின்றனர்

ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியவில்லை என்பதால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைக்க முயற்சிக்கின்றனர். அரசியல் கட்சி தலைவர் என்ற அடிப்படை  நாகரிகம் இல்லாத வகையில் அவர்  பேசுகிறார். இந்த மாதிரி பேச்சையும், பேசுபவர்களையும். தமிழக அரசு நடமாட அனுமதிக்க கூடாது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது என தெரியவில்லை.

சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்கள் வரம்புக்கு உட்பட்டு செயல்படுகின்றதா என தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து அந்த அமைப்பினர் ஏற்கனவே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலங்களை பார்க்க வேண்டும். காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு என்ன வேலை , காந்தியை  கொன்றதை கொண்டாடியவர்களின் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்து இருக்கின்றனர். அந்தந்த ஊரில் காவல்துறை முடிவு செய்ய வேண்டியதை நீதிமன்றங்கள் முடிவு செய்கின்றன. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியாக இருக்கிறது. பயங்கரவாத அமைப்பு பின்னாடி நீதிமன்றம் செல்வது வேதனையானது.

சவுக்கு சங்கர் என்பவரின் கருத்துகளில் உடன்பாடு கிடையாது என்றாலும் நீதிமன்ற அவமதிப்பில் அவருக்கு அதிகபட்சமாக தண்டணை வழங்கப்பட்டுள்ளது,  இதுவரை யாருக்கும் அந்தளவு தண்டணை கொடுத்தது கிடையாது. சிபிஐ,சிபிஎம், வி.சி.க ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து அக்டோபர் 2 ம் தேதி  மனித நேய மனித சங்கிலி போராட்டம் நடத்த இருக்கின்றோம் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைவது பா.ஜ.க , ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் கண்களை உறுத்துகின்றது.

ஆன்லைன் ரம்மி சட்டத்தினை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கின்றனர்,  இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் தமிழகத்தில் வன்முறையை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு பணமதிப்பு குறைந்த உள்ளது, பங்கு சந்தை  வீழ்ச்சியடைந்தே இருக்கின்றது. இவற்றை மூடி மறைக்க பா.ஜ்கவினர் தொடர்ந்து சச்சரவுகளை கிளப்பி திசை திருப்பி வருகின்றனர்.

பொது மக்கள் பொருளாதார நடவடிக்கைகள் கவனம் செலுத்தி விடக்கூடாது என்பதற்காக இது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இவற்றை எதிர்த்து பிரமாண்டமான போராட்டடம் நடத்த வேண்டி இருக்கிறது. பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு எதிராக காவல் துறை உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிக்க முயல்கின்றனர் மாநிலங்களுக்கு  இடையே இந்தி மொழியில் கடித போக்குவரத்து இருக்க வேண்டும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயும் இந்தி மொழியில் கடித போக்குவரத்து இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்தியாவின் பெயரை  ஹிந்தியா என மாற்ற  பார்க்கிறார்கள்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை காவல் துறை அதிகாரிகளை எச்சரிப்பது, நாட்டையே முடக்குவோம் என சொல்வதை எப்படி அனுமதிக்க முடியும் அவர் சாதாரண அரசியல்வாதி இல்லை, ஐபிஎஸ் படித்து விட்டு வந்திருக்கும் நிலையில் வார்த்தைகளின் வீரியம் தெரிந்தே இப்படி பேசுகின்றார் மாநில அரசை, முதல்வரை, காவல் துறையை மிரட்டுவதை எப்படி அனுமதிக்க முடியும். அண்ணாமலை மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது பேச்சு வன்முறை வெறியை வெளிப்படுத்தும் விதமாக பேச்சாக இருக்கிறது.

நீலகிரி எம்.பி ஆ.ராசாவின் பேச்சில் எந்த தவறும் கிடையாது ஆ.ராசா பேசிய மேடையில் நானும் இருந்தேன். அவரது பேச்சை வெட்டி ஒட்டி திரித்து ஒளிபரப்பி இருக்கின்றனர். வர்ணாசிரம தர்மத்தில் சூத்திரனை வேசியின் மகன் என்று சொல்லி இருப்பதை சொன்னார். இதற்கு வர்ணாசிரம தர்மத்தின் மீதுதான் கோவம் இருக்க வேண்டும். ஆனால் அதை எடுத்து சொன்னவர் மீது கோப்பட கூடாது.

இறை நம்பிக்கை இருக்கிறவர்களையும் மனுதர்மம் சூத்திரன் என்று தான் சொல்கிறது. ஆ.ராசா சட்டத்திற்கு புறம்பாகவோ, யாரையும் புண்படுத்தும் விதமாகவோ பேசவில்லை. ஆனால் ஆ.ராசாவை மட்டும் குறிவைத்து பா.ஜ.க  விமர்சிப்பது சாதிய கண்ணோட்டம் என்றுதான் பார்க்க தோன்றுகின்றது இதை வைத்து பா.ஜ.க அரசியல் நாடகம் ஆடுகின்றது எனவும் குற்றம்சாட்டினார்.

பேட்டியின் போது கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/communist-party-gopalakrishnan-press-meet-about-bjp-and-coimbatore-517188/