ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

மாணவர்களுக்கு தீண்டாமை கொடுமையா? பள்ளியில் தொடரும் சர்ச்சை

 24 09 2022 

மாணவர்களுக்கு தீண்டாமை கொடுமையா? பள்ளியில் தொடரும் சர்ச்சை

க.சண்முகவடிவேல்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த  உப்பிலியாபுரம் ஒன்றியம் நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டியலின மாணவர்களை சீருடையிலும், மற்ற பிரிவினை சேர்ந்த மாணவர்களை சாதராண உடைகளிலும் வரச் சொல்லியதாக அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்கராஜ் தலைமையில்,  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.

பட்டியலின மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கொலை மிரட்டல் விடுவதாகவும்,. பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு உணவு அளிப்பதிலும் பாகுபாடு தீண்டாமை கொடுமை நடைபெறுவதாக பெற்றோர்களும், மாணவர்களும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து  உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

அதே நேரம்,  அந்தப் பள்ளியில் பணிபுரிந்த லில்லி என்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை  செய்துக்கொண்டார். அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆசிரியையின் பெற்றோர் பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர்.

இதனிடையே மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப விரும்பாத பெற்றோர்கள் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுச்சான்றிதழ் கேட்டும், வேண்டுமென்றே  தலைமை ஆசிரியர் ராஜசேகர் என்பவர் தீண்டாமை விவகாரத்தை கையில் எடுத்து பள்ளி மாணவர்கள் மீது திணிக்கின்றார் என்கின்றனர் பெற்றோர்கள். பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ஒருவர் போக்சோவில் ஏற்கனவே கைதாகி இருக்கும் நிலையில் அந்தப் பள்ளியில் மாணவர்கள் ஒழுக்க நெறிகளுடன் பயில்வதில் சிக்கல் நீடிக்கின்றது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-duraiyur-school-untouchability-cruel-to-student-controversy-continues-at-school-515742/