சனி, 24 செப்டம்பர், 2022

கனடாவில் இந்திய எதிர்ப்பு கோஷங்கள் அதிகரிப்பு… மத்திய அரசு எச்சரிக்கை

 வட அமெரிக்க நாடான கனடாவில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் மற்றும் வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து காணப்படுகின்றன என இந்தியா எச்சரித்துள்ளது.

மேலும் இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் கனடாவாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை (செப்.23) எச்சரித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், “கனடாவில் வெறுப்பு குற்றங்கள், மதவெறி வன்முறை மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்கள் கூர்மையான அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் மற்றும் கனடாவிலுள்ள தூதரக அதிகாரிகள் இந்த சம்பவங்களை கனட அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி, மேற்படி குற்றங்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

எனினும் இந்தக் குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் இதுவரை கனடாவில் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. ஆகவே, பயண மற்றும் கல்வி நோக்கங்களுக்காக கனடாவுக்குச் செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தியர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் அல்லது டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள தூதரகங்களில் அல்லது Madad.gov.in (madad.gov.in) என்ற வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், “எந்தவொரு தேவை அல்லது அவசரநிலை ஏற்பட்டாலும், கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுடன் உயர் கமிஷன் மற்றும் துணைத் தூதரகங்கள் சிறப்பாக தொடர்பு கொள்ள உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/india/centre-issues-advisory-over-sharp-rise-in-hate-crimes-anti-india-activities-in-canada-515265/