வியாழன், 29 செப்டம்பர், 2022

மக்கள் தலைவரும் நிர்வாகத் தலைவரும்’: ப.சிதம்பரம்

 28 09 2022

‘மக்கள் தலைவரும் நிர்வாகத் தலைவரும்’: ப.சிதம்பரம்
Rajasthan CM Ashok Gehlot and Congress MP Shashi Tharoor are likely to contest against each other in Congress President polls. (File)

ப.சிதம்பரம்:

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல்களில் இந்த முறை வழக்கத்திற்கு மாறான ஆர்வம் காணப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திரு ஜே.பி. நட்டா பிஜேபியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது , பிஜேபி சார்பிலோ அல்லது காங்கிரஸ் தரப்பிலோ எந்த ஆர்வமும் காட்டப்படவில்லை. ‘தேர்தல் பட்டியல்’ பற்றி கேட்க யாரும் கவலைப்படவில்லை. தேர்தல் நடத்தும் அதிகாரி யாரென்றும், திரு நட்டா வேட்பு மனு தாக்கல் செய்தாரா என்றும் யாருக்கும் தெரியாது. பிஜேபி ஆளும் கட்சியாக இருந்தாலும், உலகில் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத அளவுக்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக பெருமை அடித்துக் கொண்டாலும், திரு நட்டா தலைவரானது மிகச் சாதாரணமாகவே முடிந்தது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல்களில் பிஜேபி மற்றும் ஊடகங்கள் காட்டும் அசாதாரண ஆர்வம் இரண்டு உண்மைகளை உணர்த்துகின்றன. ஒன்று, காங்கிரஸ்-முக்த் இந்தியா அதாவது காங்கிரஸ் கட்சியே இல்லாத இந்தியா என்பது ஒரு கற்பனை. அது ஒருபோதும் நடக்காது. இரண்டாவதாக, பாரத் ஜோடோ யாத்ரா எனப்படும் ஒற்றுமை யாத்திரை, பாஜகவை அதன் மெத்தன போக்கில் இருந்து உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் என்றாலே அசட்டையாக இருந்த ஊடகங்களை எழுந்து உட்கார்ந்து கவனிக்க வைத்திருக்கிறது.

கட்சியும் காந்திகளும்

காங்கிரஸ் கட்சி, தனது அடுத்த தலைவரை வரும் அக்டோபர் மாதம் தேர்வு செய்யவுள்ளது. அது யாராக இருக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. 2019 ஜூலையில் ராகுல் காந்தி ராஜினாமா செய்த பதவியை அவரே ஏற்க வேண்டும் என்று பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அது அவர்களின் உரிமை. எனினும், மீண்டும் காங்கிரஸ் தலைவராகும் விருப்பம் தனக்கு இல்லை என்று காந்தி தெளிவுபடுத்தியுள்ளார்.

கட்சித் தலைவர்கள் காந்தியின் மனதை மாற்றுவதற்கு கடைசி முயற்சியை மேற்கொள்ளலாம், ஆனால் அவர் அதை விரும்ப வில்லை என்றால் காந்தியின் விருப்பத்திற்கு மதிப்பளித்து தமது வற்புறுத்துதலை நிறுத்திக்கொள்ள வேண்டும். வேறொருவரை தலைவராகத் தேர்ந்தெடுத்து கட்சிப்பணியை வேகமாக செய்ய வேண்டும்.இடைக்கால தலைவரை தேர்ந்தெடுப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். என் பார்வையில், இந்திரா காந்தி குடும்பம் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், கட்சி காந்தியை கைவிட்டதாகவோ, ஒதுக்கி விட்டதாக அர்த்தம் இல்லை.

வரலாற்று பாடங்கள்

காங்கிரஸ் கட்சி வரலாறு சிறப்புமிக்க பாடங்களைக் கொண்டுள்ளது. இந்திய அரசியல் அரங்கில் மகாத்மா காந்தியின் வருகைக்குப் பிறகு, அவர் காங்கிரஸ் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக இருந்தார். அவரே அனைவராலும் மதிக்கப் பட்ட மக்கள் தலைவராக இருந்தார். 1921-1948 காலகட்டத்தில், 14 வெவ்வேறு நபர்கள் காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்தனர்.

அவர்களில் சிஆர் தாஸ், சரோஜினி நாயுடு, எஸ். சீனிவாச ஐயங்கார், எம்.ஏ.அன்சாரி, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், சுபாஸ்சந்திர போஸ், அபுல் கலாம் ஆசாத் மற்றும் ஆச்சார்யா கிருபளானி போன்ற ஜாம்பவான்கள் இருந்தனர். கட்சியின் மக்கள் தலைவருக்கும் நிர்வாக தலைவருக்குமான வேறுபாடு மக்களுக்கு தெரிந்திருந்தது. இந்த இரு தலைவர்களுமே ஒருவர் மேல் ஒருவர் ஆதிக்கம் செலுத்த முயன்றதில்லை.

1948 மற்றும் 1964 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் ஜவஹர்லால் நேரு காங்கிரஸின் அங்கீகரிக்கப்பட்ட மக்கள் தலைவராக இருந்தார். அதே நேரத்தில் ஏழு நபர்கள் காங்கிரஸின் நிர்வாக தலைவர் பதவியை அலங்கரித்தனர். 1965-1984 காலகட்டத்தில் இந்திரா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தார். அதே நேரத்தில் 8 நபர்கள் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகத் தலைவராக இருந்தனர்.

ஒரு பெரிய நாட்டின் ஒரு பெரிய அரசியல் கட்சியில், இந்த ஏற்பாடு சிறந்த அர்த்தமுள்ளதாக இருக்கிறது. மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்குவதும், அவர்களுடன் தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொள்வதும், கட்சிக்கு வாக்களிக்க தூண்டுவதும் மக்கள் தலைவரின் பணியாகும். கட்சியின் நிர்வாக தலைவரோ கட்சி அமைப்புகளை பலப்படுத்தி, அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வைப்பது முக்கியம். தேர்தல் காலத்தில் கட்சியின் மக்களின் ஆதரவை அப்படியே தேர்தல் வெற்றியாக மாற்றும் வேலையையும் இவருடையதுதான். இரண்டு பணிகளும் ஒன்றோடொன்று இணைந்தவை. ஒரு கட்சி இரண்டு பணிகளையும் செய்ய ஒருவரைக் கன்டுபிடித்து விட்டால் அந்த கட்சி அதிர்ஷ்டசாலி. இதுவே இருவரும் அவரவர் கடமையை பகிர்ந்து செய்தால் அதுவும் புத்திசாலித்தனம் மற்றும் நடைமுறைக்கு ஏற்றது தான்.

உருவாக்கி ஊக்கமளியுங்கள்

பொதுவாக மக்கள் தலைவர்கள் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பார்கள். மகாத்மா காந்தி அகிம்சை, ஒத்துழையாமை இயக்கம் என்று தொடங்கி இறுதியில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்ற விரிவான இயக்கம் மூலம் வெற்றி கண்டார். அணிசேராமை, மதச்சார்பின்மை, சோசலிசம் போன்ற உயரிய கருத்துக்களால் மக்களின் மனதில் இடம் பெற்றார் ஜவஹர்லால் நேரு. இந்திரா காந்தி வலுவான தேசத்தை வலியுறுத்தி வங்கி தேசியமயமாக்கல் மற்றும் அனைவருக்கும் வீடு போன்ற துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தார். தங்க நாற்கர சாலை போன்ற லட்சியத் திட்டங்களால் தேசத்தின் பார்வையை உயர்த்தியவர் ஏபி வாஜ்பாய். நேரு விதியுடன் ஒரு பயணம் என்ற உத்வேகம் தரும் வார்த்தைகளை பயன்படுத்தினார். இந்திரா காந்தி வறுமையே வெளியேறு என்று மக்களை உத்வேகப் படுத்தினார். வாஜ்பாய் இன்சானியத், ஜம் ஹுரியத் மற்றும் காஷ்மீர் என்ற வார்த்தைகளால் தன்னோடு சேர்த்து கட்சியையும் உயரத்துக்கு கொண்டு சென்றார்.

கட்சிகளின் செல்வாக்கான மக்கள் தலைவருக்கும் நிர்வாக்கத்தலைவருக்குமான பணிகள் வெவ்வேறானவை. கட்சியின் நிர்வாக தலைவர் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி இயந்திரம் மிகவும் பழுதடைந்து உள்ளதால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதற்கு நீண்ட காலம் ஆகும். மாவட்டம் முதல் மாநிலம் வரை கட்சியின் ஒவ்வொரு அலகின் செயல்பாடுகளையும் தலைவர் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

நிர்வாக தலைவர் தொண்டர்களை தகுந்த முறையில் வேலை வாங்க அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். தவறு செய்யும் நேரங்களில் உறுதியாக தண்டித்து திருத்த வேண்டும்.ஆக்கப் பூர்வமாக செயல் படுபவர்களுக்கு பதவியும் பாராட்டும் தந்து கௌரவப் படுத்த வேண்டும். கட்சி விரோதிகளை பாரபட்சமில்லாமல் தண்டிக்க வேண்டும். கட்சியின் நிர்வாக தலைவர் பதவி என்பது வருடத்தில் 364 நாட்களும் பணி செய்ய வேண்டிய பணியாகும். பல கட்சி ஜனநாயகம் மற்றும் செயல்பாட்டு கொண்ட இந்திய அரசியல் முறைக்கும் துடிப்பான நாடாளுமன்ற செயல்பாட்டுக்கும் காங்கிரஸ் கட்சி முக்கியமானது. காங்கிரஸ் இல்லா விட்டால் நாட்டில் ஒரு கட்சி மட்டுமே ஆட்சிக்கு வரும். ஜனநாயகம் என்பது கண்ணுக்குப் புலப்படாத மாயையாகி விடும்.

தமிழில் : த. வளவன்


source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-writes-the-leader-and-the-president-517389/