ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

கார்பன் டேட்டிங் என்றால் என்ன, இந்த நுட்பத்தின் மூலம் வயதை கணிக்க முடியுமா?

 24 09 2022

கார்பன் டேட்டிங் என்றால் என்ன, இந்த நுட்பத்தின் மூலம் ஞானவாபி ’சிவலிங்கம்’ வயதை கணிக்க முடியுமா?
Gyanvapi case

சிவலிங்கம் இருப்பதாக கூறப்படும் ஞானவாபி மசூதிக்குள் உள்ள கட்டிடத்தின் கார்பன் டேட்டிங் கோரிய மனுவை வாரணாசியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்; 22) அனுமதித்தது. மேலும் கார்பன் டேட்டிங்கில் தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா என்பதை அறிய மற்ற தரப்பினருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கார்பன் டேட்டிங் என்றால் என்ன?

கார்பன் டேட்டிங் என்பது ஒரு காலத்தில் வாழ்ந்த கரிமப் பொருட்களின் வயதை கண்டறிய பரவலாகப் பயன்படுத்தப்படும் முறையாகும். உயிரினங்களில் பல்வேறு வடிவங்களில் கார்பன் உள்ளது. 14 அணு நிறை கொண்ட C-14 எனப்படும் கார்பனின் குறிப்பிட்ட ஐசோடோப்பு கதிரியக்கம் உடையது மற்றும் நன்கு அறியப்பட்ட விகிதத்தில் சிதைகிறது, என்ற உண்மையை டேட்டிங் முறை பயன்படுத்துகிறது.

வளிமண்டலத்தில் கார்பனின் மிக அதிகமான ஐசோடோப்பு கார்பன்-12 அல்லது ஒரு கார்பன் அணு ஆகும், அதன் அணு நிறை 12 ஆகும். மிகக் குறைந்த அளவு கார்பன்-14 கூட உள்ளது. வளிமண்டலத்தில் கார்பன்-12 மற்றும் கார்பன்-14 விகிதம் கிட்டத்தட்ட நிலையானது.

தாவரங்கள் தங்கள் கார்பனை, ஒளிச்சேர்க்கை செயல்முறை மூலம் பெறுகின்றன, அதே நேரத்தில் விலங்குகள் உணவின் மூலம் பெறுகின்றன.

தாவரங்களும் விலங்குகளும் வளிமண்டலத்தில் இருந்து கார்பனைப் பெறுவதால், அவையும் வளிமண்டலத்தில் கிடைக்கும் அதே விகிதத்தில், கார்பன்-12 மற்றும் கார்பன்-14 ஐசோடோப்புகளை பெறுகின்றன.

ஆனால் அவை இறக்கும் போது, ​​வளிமண்டலத்துடனான தொடர்புகள் நின்றுவிடும். பிறகு அவை கார்பனை உட்கொள்வதும் இல்லை, வெளியேற்றுவதும் இல்லை, ஏனெனில் வளர்சிதை மாற்றம் நிறுத்தப்படும். இப்போது, ​​கார்பன்-12 நிலையானதாக இருக்கும் மற்றும் சிதையாது, அதே நேரத்தில் கார்பன்-14 கதிரியக்கம் உடையது. இந்த கார்பன்-14 ஆனது சுமார் 5,730 ஆண்டுகளில் பாதியாக குறைகிறது. இதுவே அதன் ‘அரை வாழ்வு’ என்று அழைக்கப்படுகிறது.

எனவே, ஒரு தாவரம் அல்லது விலங்கு இறந்த பிறகு, உடலில் உள்ள கார்பன்-12 மற்றும் கார்பன்-14 விகிதம் அல்லது அதன் எச்சங்கள் மாறத் தொடங்குகிறது. இந்த மாற்றத்தை அளவிடலாம் மற்றும் உயிரினம் இறந்த தோராயமான காலத்தை கண்டறியப் பயன்படுத்தலாம்.

உயிரற்றவை பற்றி என்ன?

இது மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அனைத்து சூழ்நிலைகளிலும் கார்பன் டேட்டிங் பயன்படுத்த முடியாது. குறிப்பாக, பாறைகள் போன்ற உயிரற்ற பொருட்களின் வயதைக் கண்டறிய இதைப் பயன்படுத்த முடியாது. மேலும், கார்பன் டேட்டிங் மூலம் 40,000-50,000 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பொருட்களின் வயதை கணிக்க முடியாது. ஏனென்றால், அரை வாழ்வின் எட்டு முதல் பத்து சுழற்சிகள் கடந்த பிறகு, கார்பன்-14 இன் அளவு மிகக் குறைவாகவும், கண்டறிய முடியாததாகவும் மாறும்.

உயிரற்ற பொருட்களின் வயதைக் கணக்கிட வேறு முறைகள் உள்ளன, ஆனால் கார்பன் டேட்டிங் சில சூழ்நிலைகளில் மறைமுகமாக பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, பனிப்பாறைகள் மற்றும் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகளின் வயது, கார்பன் டேட்டிங் மூலம் பெரிய பனிக்கட்டிகளுக்குள் சிக்கியுள்ள கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகளைப் படிப்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இப்படி சிக்கிய மூலக்கூறுகளுக்கு வெளிப்புற வளிமண்டலத்துடன் எந்த தொடர்பும் இருக்காது மற்றும் அவை சிக்கியபோது இருந்த அதே நிலையில் காணப்படுகின்றன.

ஒரு பாறை ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு காலம் இருந்தது என்பதையும் இதேபோன்ற மறைமுக முறைகளைப் பயன்படுத்தி தீர்மானிக்க முடியும். பாறையின் அடியில் கரிமப் பொருட்கள், இறந்த தாவரங்கள் அல்லது பூச்சிகள் சிக்கியிருந்தால், அந்தப் பாறையோ அல்லது வேறு ஏதேனும் பொருளோ எப்போது அந்த இடத்தை அடைந்தது என்பதற்கான குறிப்பை அவற்றால் கொடுக்க முடியும்.

ஒரு பொருளைச் சுற்றி வண்டல் படிவை, கணிக்க வேறு பல முறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, அவை குறிப்பிட்ட சூழ்நிலையைப் பொறுத்து பயன்படுத்தப்படுகின்றன.

ஞானவாபி வழக்கில், மனுதாரர்கள் மசூதி உருவாவதற்கு முன்பே அந்த இடத்தில் ‘சிவலிங்கம்’ இருந்ததை நிறுவ விரும்புகிறார்கள். அதைக் கண்டறிவது கோட்பாட்டளவில் சாத்தியம்.

கணிக்க முடியாத ஏதாவது இருக்கிறதா?

ஒரு குறிப்பிட்ட பொருளின் வயதை அறிய பல்வேறு முறைகள் இருந்தாலும், எல்லாவற்றையும் கணிக்க முடியாது. வெவ்வேறு முறைகளின் துல்லியமும் மாறுபடும்.

ஞானவாபி வழக்கில் மனுதாரர்கள் கார்பன் டேட்டிங் கோரியிருந்தாலும், இந்த வழக்கில் கார்பன் டேட்டிங் பயன்படுத்த முடியுமா அல்லது வேறு சில முறைகள் பொருத்தமானதா என்பது இப்போது தெளிவாகத் தெரியவில்லை.

அதன் அடியில் சிக்கியுள்ள கரிமப் பொருட்களைத் தேடுவது போன்ற சில முறைகள் நடைமுறையில் சாத்தியமற்றதாக இருக்கலாம், ஏனெனில் அது கட்டமைப்பைப் பிடுங்குவது அல்லது விரும்பத்தகாத வேறு சில இடையூறுகளை ஏற்படுத்தும். கட்டமைப்பின் வயதைக் கணிக்க என்ன செய்ய முடியும் என்பது விரிவான ஆய்வுக்குப் பின்னரே இறுதி செய்ய முடியும்.

source https://tamil.indianexpress.com/explained/gyanvapi-mosque-shivling-carbon-dating-varanasi-515396/