திங்கள், 26 செப்டம்பர், 2022

சர்வதேச தொடர்புகள் இருந்தால் எஸ்.டி.பி.ஐ கட்சியை மத்திய அரசு தடை செய்யட்டும் – திருமாவளவன்

 

25 09 2022

பெட்ரோல் குண்டு வீச்சு பின்னணியில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்: திருமாவளவன் தகவல்

பெட்ரோல் குண்டு வீச்சு பின்னணியில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் இருக்க வாய்ப்புள்ளது என்றும், பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.பி.டி.ஐ  அமைப்புகளுக்கு சர்வதேச அமைப்புகளோடு தொடர்பு இருப்பது உறுதியானால் மத்திய அரசு தடை செய்யட்டும் என்றும் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கோவை பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் பி.எஃப்.ஐ, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி, அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து சமூக நல்லிணக்க பேரணியை நடத்த உள்ளோம். தமிழகத்தை சனாதன சங்பரிவார் கும்பல் குறி வைத்து இங்கு சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வன்முறையை தூண்டுவதற்கு சதி திட்டம் தீட்டி வருகிறது.

பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் மூலம் பா.ஜ.க.,வினரே திட்டமிட்டு வன்முறையைத் தூண்டுகின்றனர். மிதவாத இந்துக்கள், அடிப்படைவாத இந்துக்கள் என்று எதுவும் கிடையாது. பெரும்பான்மை அடிப்படைவாத அதிகாரத்தில் அரசியல் அதிகாரத்தை வென்றுவிட முடியும் என பா.ஜ.க.,வினர் நினைக்கின்றனர். அவர்கள் புறந்தள்ளக்கூடிய சதவீதத்தினர்தான். ஒட்டுமொத்த இந்துக்களும் அப்படி இல்லை. அப்பாவி இந்துக்கள், ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் என வகைப்படுத்திக் கொள்ளலாம்.

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மை முகத்தைத் தெரிந்துக் கொண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சர்வதேச அமைப்புகளோடு தொடர்பு இருப்பது உறுதியானால் மத்திய அரசு தடை செய்யட்டும், இவ்வாறு அவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/vck-leader-thirumavalavan-says-bjp-rss-may-after-petrol-bomb-incidents-516046/