திங்கள், 26 செப்டம்பர், 2022

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா ஆதரவு

 26 09 2022

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் 77-வது ஆண்டுக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.

இதில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பங்கேற்று பேசியதாவது:
ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்கா நாடுகளையும் இந்தியா மற்றும் பிரேசிலையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், அந்த கவுன்சிலை மேலும் ஜனநாயகப்படுத்த முடியும்.
இந்தியாவும், பிரேசிலும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள். அவை பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற முழுத் தகுதி கொண்டவை.

கூடுதலாக பல மேற்கத்திய நாடுகளைப் பாதுகாப்புக் கவுன்சிலுக்கு கொண்டுவருவதால், நிச்சயமாக எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் அவை அனைத்தும் அமெரிக்காவின் உத்தரவுகளைப் பின்பற்றக் கூடியவையாக இருக்கும் என்று செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராகவும், பிரேசில், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 10 நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினராகவும் உள்ளன.

முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/russia-pitches-india-for-permanent-membership-in-unsc.html