23 09 2022
இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை விட மனுதர்மம் தான் கோலோச்சுகிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் பகுதியில்,
கட்சி நிர்வாகி விழா நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை
சந்தித்துப் பேசிய அவர்,
”தேசிய புலனாய்வு அமைப்பு, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பையும் முஸ்லிம் அமைப்பையும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஐஎஸ்ஐ இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்று அவர்கள்மீது முத்திரை குத்த முயற்சிக்கின்றனர். இந்த போக்கு பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு துணைபோகும். பிரிவினைவாத அரசியலை ஊக்குவிப்பது போல் அமைந்து விடும்.
கைது செய்த இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி
வேண்டுகோள் வைக்கிறது. தமிழ்நாட்டில் சங்பரிவார அமைப்புகள் ஊர்வலம் செல்ல
நீதிமன்றங்கள் அனுமதி வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சங்பரிவார அமைப்புகள் தமிழ்நாட்டில் மதவெறி அரசியலை விதைப்பதற்கு நினைக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் காணப்படும் காட்சிகள் தமிழ்நாட்டிலும் முளைவிடும் நிலைமை
உருவாகியுள்ளது. அதற்கு நீதிமன்றங்களும் துணைபோவது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு அரசு இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டு மண்ணுக்கான சிறப்பைக் காக்க வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது தமிழ்நாடு அமைதியாக இருந்தது. இந்து, இஸ்லாமியர்கள் என்ற பாகுபாடு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருந்தது பெருமைக்குரியது. அப்படிப்பட்ட மதவெறி அரசியலுக்கு தூபம் போடுகிறார்கள் என்பதுதான் கவலை அளிக்கிறது.
தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா சொன்னது மனுதர்மம் கூறியதை விளக்கும் நடவடிக்கையாகும். அண்ணாமலை போன்றவர்கள், எப்பொழுதோ எழுதப்பட்ட மனுதர்மத்தை தூக்கிவைத்து பேசுகின்றனர் என்று கூறுகின்றார். அவர் அறிந்து சொல்கிறாரா அறியாமல் சொல்கிறாரா என்று தெரியவில்லை. நாம் புத்தகத்தை தூக்கி வைத்துப் பேசவில்லை. நடைமுறையிலுள்ள சடங்கு சம்பிரதாயங்களை வைத்துதான் பேசுகின்றோம்.
இந்த சமூகம் மனுதர்மத்தின்கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது. மனுதர்மத்தின் அடிப்படையில்தான் பிராமணர்கள் கோவில் கருவறையில் பூஜை செய்ய வேண்டும் என சொல்கின்றனர். பிற மதத்தை சார்ந்தவர்கள் பூசை செய்வதற்கு எதிர்ப்பும் விவாதங்களும் உருவாகின்றன. புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை விட மனுதர்மம் தான் கோலோச்சுகிறது. இதை உணராமல் பேசுவது அபத்தமானது. அரைவேக்காடுத்தனமாகும்.
இந்திய மண், இந்திய சமூகம், இந்திய பண்பாடு, இந்திய வாழ்வியல் முறை, ஆகியன வர்ணாசிரம முறைப்படி தான் இயங்குகிறது. மனுதர்மம் எப்பொழுதோ எழுதப்பட்ட நூல் அல்ல. மனிதர்களின் நடைமுறையில் உள்ளது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அதைத்தான் நாம் சனாதனம் என்று கூறுகின்றோம். சமத்துவத்தை விரும்பக் கூடியவர்களாக இருந்தால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை நம்பக் கூடியவர்களாக இருந்தால், அண்ணாமலை போன்ற அனைவருமே சனாதனத்தை எதிர்க்க முன்வரவேண்டும்” என்று கூறினார்.
– ஜெனி
source https://news7tamil.live/humanity-prevails-over-the-constitution-vishika-president-thol-thirumavalavan.html