செவ்வாய், 27 செப்டம்பர், 2022

பெட்ரோல் குண்டு வீச்சு; விசாரிக்க வேண்டும்

 26 09 2022

பெட்ரோல் குண்டு வீச்சு; ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க-வை விசாரிக்க வேண்டும்: தி.மு.க கருத்து

தமிழகத்தில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க-வினரை விசாரிக்க வேண்டும் என தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி செய்தி வெளியிட்டுள்ளது.

கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட சில இடங்களில் பா.ஜ.க அலுவலகம் மற்றும் பா.ஜ.க-வினர் வீடு வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளதற்கு, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எல்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க-வினரை விசாரிக்க வேண்டும் என தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து முரசொலி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: “கடந்த காலத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தங்கள் வாகனங்களுக்கு தாங்களே தீவைத்துக்கொண்ட 12 சம்பவங்களை பட்டியலிட்டுள்ளது. தங்கள் வாகனங்களுக்கு தாங்களே தீவைத்துக்கொண்ட சம்பவங்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வினர் எந்தவொரு செயல்களிலும் இறங்கிடத் தயங்காதவர்கள் இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகிறது.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில், காவல்துறை இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு உண்மைக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ராணுவ வீரரின் இறுதி ஊர்வலத்தில்கூட அரசியல் செய்பவர் என்பதை அமைச்சரின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தின்போது தொலைபேசி உரையாடல் தெளிவாகக் காட்டியுள்ளது என்று முரசொலியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதம், மாநிலத்தில் அமைதி சீர்குலைவுக்கு தூபம் போடும் செயல் என முரசொலி செய்தியில் விமர்சிக்கப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mouthpiece-murasoli-insists-police-probe-at-rss-and-bjp-cadres-in-petrol-bomb-case-516378/