திங்கள், 26 செப்டம்பர், 2022

மகாத்மா காந்தியின் கொள்கைகளை விட்டு மத்திய அரசு விலகிச் செல்கிறது-மணிசங்கர் ஐயர்

 

மகாத்மா காந்தியின் கொள்கைகளை விட்டு மத்திய அரசு விலகிச் செல்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் தெரிவித்தார்.

மதுரையில் நடைபெற்று வரும் அகிம்சை சந்தையை பார்வையிட்ட முன்னாள் மத்திய
அமைச்சர் மணிசங்கர் ஐயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மகாத்மா காந்தியின் கொள்கைகள் முன்னெப்போதையும் விட தற்போதுதான் அதிகம்
தேவைப்படுகிறது. அகிம்சை சந்தை போன்ற நிகழ்வுகள் மூலம் காந்தியின் கொள்கைகளை இளைய தலைமுறையினர் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். காந்தியின் வழி அகிம்சை வழியாகும்.

காந்தி மக்கள் மத்தியில் அன்பு, நட்பு போன்றவற்றை மட்டுமே போதித்தார். வெறுப்புணர்வை காந்தி அடியோடு வெறுத்தார். ஆனால் தற்போது நாட்டை ஆள்பவர்களால் வெறுப்புணர்வு மட்டுமே ஊட்டப்பட்டு வருகிறது.

காந்தியின் பெயரை கூறிக் கொள்பவர்கள் காந்தியின் கொள்கைகளை பின்பற்றவில்லை.
முன்பு மத்திய-மாநில அரசுகளுக்கிடையே பிரச்னை ஏற்படும்போது அவற்றை களைந்து
ஒற்றுமையை ஏற்படுத்த இருதரப்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதன்மூலம் பிரச்னைகள் கருத்து வேறுபாடுகள் களையப்படும். ஆனால் இன்று
ஒற்றுமையின்மைதான் போதிக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு விதைக்கப்படுகிறது.

காந்தியின் கொள்கைகளை விட்டு மத்திய அரசு விலகிச் செல்கிறது. காந்தியின்
கொள்கைகளுக்கு நாம் மீண்டும் திரும்பாவிட்டால் நாடு மிகப்பெரிய சீரழிவை
சந்திக்கும். 
காந்தியின் பெயரைக்கூறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு தகுதி இல்லை. கடந்த 8
ஆண்டுகளாக ராகுல் காந்தி எங்கே என்று கேள்வி கேட்டவர்கள் இன்று அவரது
நடைபயணத்தால் அச்சமடைந்துள்ளனர்.

ராகுல் காந்தி எங்கே என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக
மக்கள் ராகுல் காந்தியை தேடிச் செல்கின்றனர்.

எதிர்க்கட்சியினர் கூட ராகுல் காந்தியின் நடைப் பயணத்தை வரவேற்றுள்ளனர்.
தற்போதையச் சூழலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மிகவும் அவசியமான ஒன்று என்ற
சிந்தனை வளர்ந்து வருகிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி
மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றார் மணிசங்கர் ஐயர்.


source https://news7tamil.live/center-is-moving-away-from-mahatma-gandhis-principles-manishankar-iyer.html