22 09 2022
Popular Front of India (PFI) – Amit Shah Tamil News: தமிழகம் உட்பட நாட்டின் 11 மாநிலங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பி.எப்.ஐ-இன் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக கூறி 106 பி.எப்.ஐ அமைப்பின் ஆர்வலர்களைக் கைது செய்துள்ளது என்ஐஏ. இதில், அதிகபட்சமாக கேரளாவில் 22 பேரும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் தலா 20 பேரும், தமிழ்நாட்டில் 10 பேரும், அசாமில் 9 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 8 பேரும், ஆந்திரப் பிரதேசத்தில் 5 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மற்றும் டெல்லியில் தலா 3 பேரும் மற்றும் ராஜஸ்தானில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனைகளின் போது கைது செய்யப்பட்டவர்கள் “இன்று வரையிலான மிகப்பெரிய விசாரணை கைது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் சோதனைகள் மற்றும் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) இயக்குநர் ஜெனரல் தினகர் குப்தா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் உள்ள பயங்கரவாத சந்தேக நபர்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) அமைப்பினருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் அமித் ஷா ஆய்வு செய்ததாக ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/amit-shah-holds-meet-discusses-action-against-pfi-terror-suspects-tamil-news-514481/