வெள்ளி, 30 செப்டம்பர், 2022

தடை செய்த வரலாறு…பேரணி அனுமதி மறுப்பு ரியாக்ஷன்ஸ்

 

29 09 2022

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை இப்போது பார்ப்போம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, கோர்ட்டின் அனுமதி இருந்தும் கூட ஆர்.எஸ்.எஸ். பேரணியை தடை செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பாக பாராட்டுகிறோம். முதலமைச்சர் மதசார்பின்மை மீது அசைக்க முடியாது நம்பிக்கை கொண்டவர். எனவே அவர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் சிறப்புடையது, என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை நியாயம்! காந்தியின் பேரால் மனித சங்கிலியை தமிழ் நாடு அரசு ஆதரிக்க வேண்டும் ! தேசத் தந்தை காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2, அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில், தமிழ் நாட்டில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது.

அதே சமயம், காந்தி பிறந்த நாளில், மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவதற்கும் அனுமதி இல்லை என்று செய்திகள் வருகின்றன. அவ்வாறானால் அது சரியான முடிவல்ல.

தமிழ் நாடு அரசு மதவெறி அமைப்புகளையும், மத நல்லிணக்க நடவடிக்கைகளையும் நேர்கோட்டில் வைத்து பார்ப்பது மதவெறி சக்திகளை தனிமைப்படுத்த உதவாது. இவ்விசயத்தில், தமிழ் நாடு அரசிடமும், காவல்துறையிடமும் சட்டப்படி அனுமதி பெற்று திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டத்தை நடத்த முயற்சி செய்வோம். என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், RSS ஒரு மதவெறி ஃபாசிச அமைப்பு; அரசியல் கட்சியல்ல. அது நடத்துவதாக அறிவிக்கப்பட்ட அணிவகுப்பைத் தடைசெய்த அதே வேளையில் இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய அரசியல் கட்சிகள் அறிவித்த மனித சங்கிலிக்கும் தடை விதித்தது எவ்வகையில் பொருந்தும்? மனித சங்கிலிப் போராட்டத்திற்கு மதிமுக, தவாக, நாதக, மமக, இ.யூ.மு.லீக், தேசியலீக், எஸ்டிபிஐ, சிபிஐ (எம்எல்-விடுதலை) போன்ற அரசியல்கட்சிகளும் திக, தபெதிக, திவிக, தபுக, மக்கள்மன்றம் உள்ளிட்ட சமூகநீதி இயக்கங்களும் பங்கேற்கிற சமூகநல்லிணக்க மனிதசங்கிலிக்கும் தடை விதித்திருப்பது எவ்வகையில் நீதியாகும்?

பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் பாரபட்சம் காட்டக்கூடாது! சனாதனப் பயங்கரவாத அமைப்புகளையும் தடைசெய்யவேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ.வியனரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ் நாட்டில்  மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டையே அமளிக்காடாக மாற்ற திட்டமிட்டிருந்த இந்து மதவாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்குத் தடை விதித்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவு சிறப்புக்குரிய தாகும்.

காவல் துறையின் இந்நடவடிக்கைக்கு ஆணைப்பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரிய நேரத்திலான இந்த சரியான முடிவை தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி பாராட்டி வரவேற்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டிலும் இன்றைய சூழ்நிலை போலவே,   ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பா.ஜ.க.வினர், தமிழகத்தில் இராஜேந்திர சோழன் முடி சூட்டிக் கொண்ட 1,000 ஆவது ஆண்டை காரணம் காட்டியும்  ஆர்.எஸ்.எஸ் ஆண்டு விழா நடத்துவதாகவும் கூறி  தமிழ்நாடு முழுவதும் அதைக் கொண்டாடுவதற்காக 9.11.2014 நாளன்று  ஆர்.எஸ்.எஸ் அமைப்புப் பேரணி நடத்த முடிவு செய்து தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரியது. அன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு  எந்த பேரணிக்கும் அனுமதி கிடையாது என அறிவித்தது.

காவல்துறைச்  சட்டம் பிரிவு, 13 பி மற்றும் சென்னை மாநகர  காவல் சட்டம் பிரிவு, 41 ஏ ஆகியவற்றின் அடிப்படையில், தமிழ் நாடு முழுவதும் காவல்துறை அனுமதி மறுத்த வரலாறு தமிழ்நாட்டிற்குண்டு.

அப்போதும் தற்போது போன்றே  ஆர்.எஸ்.எஸ். விழாவைக் கொண்டாட, அனுமதி அளிக்க, தமிழ்நாடு அரசு  ஆணைப் பிறப்பிக்க வேண்டும் எனகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் வழக்குத் தொடுத்தனர்.

இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட பிறகு…  உயர்நீதி மன்றம், வெள்ளைச் சட்டை, காக்கி அரைக்கால் சட்டை, காவல் மற்றும் இராணுவத்தின் சீருடை அல்ல என கூறியதோடு, சில  கட்டுப்பாடுகளுடன் பேரணிக்கு  அனுமதி அளித்தது..

ஆனால் அன்றைய முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா இத்தகைய பேரணிகளை அனுமதிப்பது அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளிக் காடாக்கிவிடும்,  சமய சிறுபாண்மை மக்கள் எனது தலைமையிலான இந்த அரசு மீது வைத்துள்ள நம்பிக்கைக்கைக்கு குந்தகம் விளைவித்து விடும் என கூறி அனுமதி மறுப்பில் உறுதியாக நின்று தமிழ்நாடு முழுவதும் அனுமதி கோரியவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து சிறையிலடைத்தார்.

தமிழ்நாட்டின் அந்த வரலாற்று சிறப்பை மீண்டும் புதுபித்து தமிழ்நாடு  மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கையை  எடுத்து தமிழ்நாட்டின் “அமைதிப் பூங்கா” பெயரையும் இங்குள்ள சமூக நல்லிணக்க பண்பாட்டு சூழலையும்  பாதுகாக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் என்ற  இந்துமத அமைப்பின் பேரணிக்கு அனுமதி மறுத்து தமிழ்நாட்டின் தனித் தன்மையும் சமூக நல்லிணக்க பண்பாட்டையும் பாதுகாத்திருப்பது அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து சனநாயக ஆற்றல்களாலும் வரவேற்று பாராட்டப் படுகிறது என கூறியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-govt-denied-permission-to-rss-rally-leaders-reactions-518266/