30 09 2022
பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்திற்கும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுப்பு தெரிவித்து எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் விளக்க மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.
அதில் பொள்ளாச்சி குமரன் நகரில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு, மற்றும் கையெரி குண்டு வீசப்படும் எனவும், சட்டம் ஒழுங்கு பாதுகாத்துக் கொள்ளவும் என எழுதப்பட்ட அந்த கடிதத்தில் குமரன் நகர் எஸ்.டி.பி.ஐ என குறிப்பிட்டு இருந்தது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானதோடு, செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ கோவை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் இக்பால் தலைமையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு ஒன்று அளித்துள்ளனர்.
அதில் காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்திற்கும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேண்டுமென்றே கோவையில் தற்போது உள்ள சூழ்நிலை பயன்படுத்தி பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கில் மர்ம நபர்கள் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டு வீன் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் உண்மையான நபர்களை கண்டறிய வேண்டும் எஸ்.டி.பி.ஐ கட்சி பெயரை வைத்து இந்த கடிதம் பரவுவதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
source https://tamil.indianexpress.com/tamilnadu/sdbi-explanation-on-kovai-bomb-threatening-letter-518256/