28 09 2022
மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை காலை பி.எஃப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்தது. தடை செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அரசின் முடிவை ஏற்று பி.எஃப்.ஐ அமைப்பை கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை மத்திய அரசு தடை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பி.எஃப்.ஐ அமைப்பைக் கலைப்பதாக புதன்கிழமை அறிவித்தது.
பி.எஃப்.ஐ மாநில பொதுச் செயலாளர் ஏ. அப்துல் சத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்துறை அமைச்சகம் தடைசெய்து அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து அமைப்பு கலைக்கப்பட்டதாகக் கூறினார். “நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில், உள்துறை அமைச்சகத்தின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.
“பிஎஃப்ஐ கடந்த 30 ஆண்டுகளாக சமூகத்தின் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார அதிகாரமளிப்புக்கான தெளிவான பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், நமது பெரிய நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற முறையில், உள்துறை அமைச்சகத்தின் முடிவை இந்த அமைப்பு ஏற்றுக்கொள்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கலைக்கப்பட்டதை அதன் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்கும் தெரிவிக்கிறது. அறிவிப்பு வெளியானதில் இருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை காலை பி.எஃப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா பவுண்டேஷன் (RIF) மற்றும் கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஆகியவற்றை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்தது.
ஏழு மாநிலங்களில் உள்ள காவல்துறை குழுக்கள் பி.எஃப்.ஐ அலுவலகம், தலைவர்கள், நிர்வாகிகளின் இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனைகளை நடத்தியது. தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 270 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது. இந்த கைது நடவடிக்கைக்குப் பிறகு, பி.எஃப்.ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.
source https://tamil.indianexpress.com/india/pfi-dissolves-organisation-hours-after-ban-it-says-accept-govts-decision-517641/