வியாழன், 29 செப்டம்பர், 2022

திருச்சியில் பரவும் உண்ணிக் காய்ச்சல்: அறிகுறிகள் என்ன?

 

28 09 2022

தமிழகத்தில் பருவநிலை காரணமாக காய்ச்சல் பரவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு இடங்களில் இன்ஃபுளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசு சார்பில் காய்ச்சல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தொந்தரவுகளுக்கு சிகிச்சை அளிக்க 100 படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் தற்போது 21 குழந்தைகளும், 22 பெரியவர்களும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் காய்ச்சல், உடல் வலி தொந்தரவுகளுக்கு பலர் வருவதால் படுக்கை பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புதிய காய்ச்சல் ஒன்று குறித்து திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர். நேரு செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, ”ஸ்க்ரப் டைபஸ் என்ற இந்த காய்ச்சல் ஒரியண்டா சுட்டுகாமோஷி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறி.

உண்ணிக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் இந்த காய்ச்சலுக்கு பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மண்ணில், தரையில் கை வைத்து யார் அதிகம் புழங்குகிறார்களோ அவர்களுக்கு இந்த காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

உடலில் மார்பகத்திற்கு கீழோ, மறைக்கப்பட்ட பகுதியிலோ, முதுகு பகுதியிலோ புண் போன்று ஆறாது அறிகுறிகள் இருந்தாலும், அம்மைக்கு வரக்கூடிய சிறு சிறு புள்ளிகளாக வரக்கூடிய
தோலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் போன்றவையும் இதன் அறிகுறி. இவை சில நேரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மூளைக்காய்ச்சல் போன்று மாறிவிடுகிறது. வீட்டில் உள்ள செல்லப் பிராணிகள் வழியாகவும் இந்த உண்ணிக் காய்ச்சல் பரவுகிறது.

மேல்குறிப்பிட்ட அறிகுறிகள் கொண்ட நோயாளிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். மருந்தகங்களில் தாங்களாகவே மருந்துகளை வாங்கி உட்கொள்வதை மக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “H1N1, SWINE FLU VIRUS,தொற்று காய்ச்சல் குழந்தைகளுக்கு அதிகம் பரவுகிறது. குழந்தைகளிடமிருந்து பெரியவர்களுக்கு பரவுகிறது.
மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் இன்னும் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளதால் அனைவரும் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்படுகின்றனர். தொண்டை வலி, உடல் வலி, காய்ச்சல், சளி, தும்மல், இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க உதவ வேண்டும்.

கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தினமும் நான்கு, ஐந்து என பதிவான பாதிப்பு தற்போது 18க்கும் மேல் பதிவாகி வருகிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் நம்முடைய அலட்சியம் தான். கொரோனா முற்றிலும் அழிந்துவிட்டது முகக் கவசம் தேவையில்லை, தனிநபர் இடைவெளி கடைபிடிக்க வேண்டாம் என இதுவரை எந்த அரசாங்க ஆணையும் வரவில்லை.

ஆனால் மக்களாகிய நாம் நாமாக முடிவெடுத்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறோம். முகக் கவசம் அணியாமல் அதிக கூட்டம் உள்ள இடங்களுக்கு சென்று கொரோனாவை பரப்பியும் விடுகிறோம் நாமும் பெற்றுக் கொள்கிறோம். கொரோனா நோய் தொற்றுக்கு தற்போது வரை நிரந்தர மருந்து கண்டுபிடிக்கவில்லை. தொற்றுக்கு நோயாளிகள் இறந்துவருகிறார்கள். எனவே, மக்கள் அனைவரும் முகக் கவசம், தனி நபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

நம்முடைய குடும்ப நலன், சமுதாய நலன் கருதி கொரோனாவை முற்றிலும் ஒழித்திட மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

செய்தி க.சண்முகவடிவேல்

source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-government-doctor-awareness-on-newly-spread-fever-and-it-symptoms-517490/