காந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் தமிழ்நாட்டில் எந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று கூறியுள்ளது தமிழ்நாடு அரசு.
உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினை இந்திய ஒன்றிய அரசு தடை செய்துள்ள நிலையில் அதற்கு எதிராக சில இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன.
இந்தப் பின்னணியில் மாநிலத்தில் பல இந்து அமைப்புகளின் தலைவர்கள், வீடுகள் வண்டிகள் மீது பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுகள் வீசும் நிகழ்வுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் சில பாஜக நிர்வாகிகள் தங்கள் மீது தாங்களே தாக்குதல் நடத்திக்கொண்டு நாடகமாடிய நிகழ்வுகளின் பின்னணியில் இந்த நிகழ்வுகளை சில அரசியல் கட்சிகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றன.
இப்படி மதப் பதற்றத்தை நோக்கி இட்டுச்செல்லும் வாய்ப்புள்ள நிகழ்வுகள் நடந்துள்ள பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்ததால், அதே நாளில் சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் ஊர்வலம், மனித சங்கிலி போன்றவற்றை நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் அனுமதி கேட்டுள்ளன.
போட்டியான இத்தகைய மக்கள் திரள் நடவடிக்கைகள் மோதலாக மாறி சட்டம் ஒழுங்கை பாதிக்குமோ என்ற அச்சத்தை பலரும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுவந்தனர். இந்தப் பின்னணியில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க காவல் துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முறையீடு
அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தத் திட்டமிட்டிருந்த ஊர்வலத்திற்கு நீதிமன்ற உத்தரவை மீறி தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பதாக அந்த அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 2) எந்த அமைப்பின் ஊர்வலத்திற்கும் பொதுக் கூட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்போவதில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக ஆர்.எஸ்.எஸ். தரப்பு வழக்கறிஞர்கள் பிரபாகரன், பிரபு மனோகர், சந்திரசேகரன் ஆகியோர் ஆஜராகி முறையிட்டனர்.
சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைக் காரணமாகக் காட்டி, நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்யும் வகையில் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஐம்பது பேர் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி இளந்திரையன் கூறியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரி முன்னதாக அந்த அமைப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கோரி அளித்திருந்த மனுக்களைப் பரிலீசிலனை செய்து அனுமதி அளிக்க வேண்டுமென்றும் அந்த ஊர்வலத்தில் காயம் ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் கோஷங்களை எழுப்பக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. மதரீதியான பிரச்சனைகள் ஏற்படுத்தாத வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் சாலைகளைப் பயன்படுத்த வேண்டுமெனவும் கூறியது நீதிமன்றம்.
இருந்தபோதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காணிப்பாளர்கள், இந்த ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க மறுத்தனர். இந்த நிலையில் இன்று காலையில், இதனை அதிகாரபூர்வ அறிவிப்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்: தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனு தாக்கல்?
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ள அதே நேரம், இந்த ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கும்விதமாக நீதிமன்றம் அளித்த உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனுவும் தாக்கல்செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுமெனக் கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேற்று இரவே பதில் அளித்திருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் கோரப்பட்ட நிலையில், முன்னதாக நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டுமெனக் கோரி, தமிழ்நாடு அரசின் சார்பில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்னணி என்ன?
1925ம் ஆண்டு தொடங்கப்பட்ட ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பின் வரலாறு சர்ச்சைகள் நிறைந்தது.
தீவிர இந்து மதவாதக் கோட்பாடுகள் உடைய இந்த அமைப்பு மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டு பிறகு மீண்டும் தடை நீக்கம் பெற்று இயங்கி வருகிறது.
இந்திய விடுதலைக்குப் பிறகு, மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக இந்த அமைப்பு குற்றம்சாட்டப்பட்டு முதல் முறையாக இந்த அமைப்பு 1948ல் தடை செய்யப்பட்டது. பிறகு நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துவிட்டது.
பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவில் அவசர நிலையை பிரகடனம் செய்து, எதிர்க்கட்சி அரசுகளைக் கலைத்து, எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்தபோது, 1975ல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் தடை செய்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் எதிர்ப்பு அமைப்புகளுடன் உறவை வளர்த்துக்கொண்ட ஆர்.எஸ்.எஸ். அதை வைத்து தனது அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்திக்கொண்டது. பிறகு இந்தத் தடையும் நீக்கப்பட்டது.
16ம் நூற்றாண்டில் அயோத்தியில் கட்டப்பட்ட பாபர் மசூதி அமைந்துள்ள இடத்தில்தான் இந்து அவதாரக் கடவுளான ராமர் பிறந்ததாக கூறி அந்த இடத்தில் மசூதியை இடித்துவிட்டு, ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்று 1980களில் மிகப்பெரிய இயக்கத்தைத் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். 1992ல் இந்த மசூதி ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட தீவிர இந்து மதவாத அமைப்புகளால் இடிக்கப்பட்டது. இதையடுத்து மூன்றாவது முறையாக ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பால் இந்த தடை ரத்து செய்யப்பட்டது.
ஆனால், இந்த அமைப்பு தொடர்ந்து பிரிவினைக் கருத்தியலோடும், தீவிரத் தன்மையோடும் செயல்படுவதாகவும், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் எதிராக வெறுப்பைப் பரப்புவதாகவும் இதன் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்த அமைப்பின் தொண்டர்கள் காக்கி சீருடை அணிகிறவர்கள். தாங்கள் செயல்படும் பகுதிகளில் சிறு குழுக்களாக இணைந்து பூங்காக்கள், மைதானங்கள் போன்ற இடங்களில் இவர்கள் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். இந்தப் பயிற்சிக் கூடல்களுக்கு 'ஷாகா' என்று பெயர். ஷாகா என்ற வடமொழி சொல்லுக்கு 'கிளை' என்று பொருள். இந்த ஷாகா கூட்டங்கள், இந்த அமைப்பின் கிளைக் கூட்டங்கள் என்ற பொருளில் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. தங்கள் உறுப்பினர்களின் பட்டியலை எழுத்துப்பூர்வமாகப் பராமரிக்காத இந்த அமைப்பு, தங்களுக்கு இந்தியா முழுவதும் 50 ஆயிரம் ஷாகாக்கள் இயங்குவதாக கூறுகிறது.
இந்து ஆண்கள் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருக்க முடியும் என்கிறது ஆர்.எஸ்.எஸ். இணைய தளம். பெண்களுக்கு ராஷ்ட்ரிய சேவிகா சமிதி என்ற தனி அமைப்பு செயல்படுகிறது.
இந்தியாவை ஆளும் பாஜக இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தமது வழிகாட்டி அமைப்பாக, தாய் அமைப்பாக ஏற்றுக்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட பெரிய பாஜக தலைவர்கள் பெரும்பாலோர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் வேலை செய்தவர்கள்.