சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட கொதிகலன் வெடிப்பு விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
சிங்கிதாரி கிராமத்தில் அமைந்துள்ள வேதாந்தா தெர்மல் மின் உற்பத்தி நிலையத்தின் யூனிட்-1 கொதிகலன் குழாயில் மதியம் 2 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. வெடிப்பு ஏற்பட்டவுடன் ஆலையின் உள்ளே இருந்த தொழிலாளர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சிதறி ஓடியதால் வளாகத்தில் குழப்பமும் கூட்டநெரிசலும் ஏற்பட்டது. விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்தி மாவட்ட ஆட்சியர் அம்ரித் விகாஸ் டோப்னோ, 9 பேர் உயிரிழந்திருப்பதை உறுதிப்படுத்திய நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 30 முதல் 40 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபுல் தாக்கூர் கூறுகையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொதிகலன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன; அது குளிர்ந்த பின்னரே முழுமையான மீட்புப் பணிகளை முன்னெடுக்க முடியும். சில தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கூடுதல் படைப்பிரிவுகள் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்த விபத்து குறித்து வேதாந்தா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது பிசினஸ் பார்ட்னர் நிறுவனமான என்.ஜி.எஸ்.எல் பணியாளர்கள் பணியில் இருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதே தங்களது முதல் முன்னுரிமை என்றும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். விபத்துக்கான சரியான தொழில்நுட்பக் காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகவில்லை.
source https://tamil.indianexpress.com/india/blast-at-vedantas-chhattisgarh-unit-rescue-operations-underway-at-vedantas-sakti-plant-after-fatal-boiler-explosion-11726511





