/indian-express-tamil/media/media_files/2026/04/10/police-arun-2026-04-10-20-22-12.jpg)
தமிழகத்தில் ஒரு பக்கம் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம், தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில, தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வரும் ஏப்ரல் 21-ந் தேதி வரை பிரச்சாரம் நடைபெற உள்ளது. ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபக்கம், அரசு உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே உள்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள தேர்தல் ஆணையம் சென்னை மாநகரின் புதிய ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இடமாற்றம் செய்யப்பட்டதோடு இல்லாமல், அவர் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே புதிய சென்னை மாநகர காவல் ஆணையர் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள, அபின் தினேஷ் மோதக் குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக இருந்தவர். தற்போது இவர் சென்னையின் புதிய காவல் ஆணையாராக பொறுப்பேற்க உள்ளார். காவல் ஆணையர் அருண் பாரபட்சமாக செயல்படுவதாக த.வெ.க மற்றும் பா.ஜ.க சார்பில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்தும் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது காவல் ஆணையர் அருண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-chennai-police-commissioner-arun-transfer-election-commission-action-11713303





