சனி, 18 ஏப்ரல், 2026

மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி

 

மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி

17 4 2026
கடந்த 2023-ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதேபோல இடஒதுக்கீட்டை செயல்படுத்த சட்டசபை மற்றும் மக்களவை தொகுதிகளும் மறுவரையறை செய்யப்பட உள்ளது. இதற்காகவும் திருத்தம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இவை தொடர்பாக மத்திய அரசு தயார் செய்த அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சிறப்பு கூட்டத்தொடர் நேற்று வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்கீடு சட் டத்தை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026 ஆகியவற்றை மத்திய சட்ட அமைச்சர் அர் ஜூன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகம் செய்தார். இதேபோல யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026-ஐ உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகம் செய்தார்.இந்த 3 மசோதாக்களுக்கும் காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படாது என உறுதி அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தமிழகத்தில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 59 ஆக உயரும். அதே போல, கேரளாவில் 20-ல் இருந்து 30 ஆகவும், ஆந்திராவில் 25-ல் இருந்து 38 ஆகவும், தெலங்கானாவில் 17-ல் இருந்து 26 ஆகவும், கர்நாடகாவில் 28-ல் இருந்து 42 ஆகவும் அதிகரிக்கும். கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா போன்றே தற்போதைய மசோதாவும் உள்ளது. எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒரு புள்ளிகூட கூடுதலாக சேர்க்கப்படவில்லை" என்று கூறினார். இந்நிலையில், 3 மசோதாக்கள் மீது மக்களவையில் இன்றும் விவாதம் தொடர்ந்தது. மாலையில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினர். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு வாக்கெடுப்பு நடந்தது. இதில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாக்கள் தோல்வியடைந்தன.




source https://tamil.indianexpress.com/india/parliament-special-sitting-live-updates-track-key-bills-including-delimitation-and-womens-reservation-11731518