மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) 2026-ம் ஆண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று (ஏப்ரல் 15) வெளியானது, இந்த தேர்வு முடிவுகளை எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில், டிஜிலாக்கர் மற்றும் உமன்ங் ஆப் அப்டேட் கொடுத்திருந்தது.
தேர்வு குறித்த தகவல்கள்
இந்த கல்வி ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கி மார்ச் 11-ம் தேதி வரை நடைபெற்றன. தினமும் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை ஒரே ஷிப்டாக இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு சுமார் 25 லட்சம் மாணவர்கள் இத்தேர்வுகளை எழுதியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிலாக்கர் மற்றும் உமன்ங் ஆப் அப்டேட்
இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று (ஏப்ரல் 15) வெளியான நிலையில், தேர்வு முடிவுகளை உடனடியாக எளிமையாக தெரிந்துகொள்ள வசதியாக, டிஜிலாக்கர் (DigiLocker) தளம் ரிசல்ட் குறித்த அறிவிப்புகளை முன்கூட்டியே வழங்கி இருந்தது. அதேபோல், மத்திய அரசின் 'உமன்ங்' (UMANG) செயலியிலும் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் தங்களின் டிஜிலாக்கர் கணக்குகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். குறிப்பாக, 'அப்பார்' ஐடி (APAAR ID) இல்லாத மாணவர்கள் தங்கள் கணக்கை உறுதிப்படுத்துவது அவசியம். 'அப்பார்' ஐடி கொண்டுள்ள மாணவர்களுக்கு அவர்களின் டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்கள் ரிசல்ட் வெளியானவுடன் தானாகவே "Issued Documents" பகுதியில் பதிவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரிசல்ட் பார்ப்பது எப்படி?
தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியான பிறகு, மாணவர்கள் கீழ்காணும் தளங்கள் வாயிலாகத் தங்களின் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்யலாம்:
இணையதளங்கள்: cbseresults.nic.in, cbse.gov.in
செயலிகள்: DigiLocker, UMANG app
மதிப்பெண் பட்டியலைப் பார்க்க மாணவர்கள் தங்கள் ரோல் எண் (Roll Number), பள்ளி எண் (School Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இணைய வசதி இல்லாதவர்கள் 7738299899 என்ற எண்ணிற்கு 'CBSE10 <rollno>' என எஸ்.எம்.எஸ் (SMS) அனுப்பியும் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
மேம்படுத்தும் தேர்வுகள் (Improvement Exams)
மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்களுக்கான இரண்டாம் கட்டத் தேர்வுகள் மே 15-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறும் என சி.பி.எஸ்.இ ஏற்கனவே அறிவித்திருந்தது.
மாணவர்களுக்கான அறிவுரை
தவறான தகவல்கள் மற்றும் தரவுத் திருட்டைத் தவிர்க்க மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்தவுடன், அதில் உள்ள பெயர்கள் மற்றும் இதர தனிப்பட்ட தகவல்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
source https://tamil.indianexpress.com/education-jobs/cbse-class-10-results-2026-date-time-how-to-check-digilocker-umang-app-updates-11730433





