தமிழகத்தில் இன்று ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவிலான பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை வெளியிட்ட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தேர்தல் அமைதியாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 5,67,07,380 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். இதில் பெண்களின் எண்ணிக்கை 2,89,60,838 ஆகவும், ஆண்களின் எண்ணிக்கை 2,77,38,925 ஆகவும் உள்ளது. மொத்த வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுமார் 14.5 லட்சம் இளைஞர்கள் முதல்முறை வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் 33,133 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தப் பணியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்களும், 83,000-க்கும் அதிகமான காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.23 4 2026
தொழில்நுட்ப ரீதியாக, 1.06 லட்சத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஏதேனும் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டால் அதனைச் சமாளிக்க கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 4,18,541 வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-election-polling-live-updates-in-tamil-11755995





