சனி, 11 ஏப்ரல், 2026

மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் பொது சிவில் சட்டம் அமல்’:

 

11 4 2026 


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது, மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமல்படுத்துவதாக உறுதியளித்தார். இந்த தேர்தல் அறிக்கை வங்காளத்தின் கனவுகளை நனவாக்கும் என்றும், நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க வங்கதேச எல்லை சீல் வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பா.ஜ.க அரசு வங்காளத்தில் உள்ள சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து, நீக்கி, நாடு கடத்தும்,” என்று அவர் உறுதி அளித்தார்.

முதல்வர் மதா பானர்ஜி மக்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிட்டதாகவும், பொதுமக்கள் இப்போது “அச்சத்திலும், ஏமாற்றத்திலும் உள்ளனர், அவர்கள் மனதார மாற்றத்தை விரும்புகிறார்கள்” என்றும் அமித்ஷா கூறினார். “கடந்த 10 ஆண்டுகளில், பாரதிய ஜனதா கட்சி இங்கே ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இன்று, மேற்கு வங்க சட்டப்பேரவையில் நாங்கள் முதன்மையான எதிர்க்கட்சியாகப் பணியாற்றி வருகிறோம்,” என்றார் அவர்.

அமித்ஷா கூறினார்: “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்.”

“இந்த தேர்தல் அறிக்கை வங்காளத்தின் அனைத்துப் பிரிவினரையும் விரக்தியிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கான ஒரு பாதையாகும். பல்வேறு வகையான அச்சங்களால் சூழப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இது ஒரு புதிய வழியைக் காட்டும்... பிரதமர் மோடி கற்பனை செய்துள்ள வளர்ந்த இந்தியாவுக்கான வரைபடத்தை இந்த தேர்தல் அறிக்கை வங்காள மக்களின் முன் வைக்கும்... மக்கள் பயந்தும் ஏமாற்றமடைந்தும் உள்ளனர். மக்கள் மனதார மாற்றத்தை விரும்புகிறார்கள்... இன்று நாங்கள் வங்காள சட்டப்பேரவையில் முக்கிய எதிர்க்கட்சியாகப் பணியாற்றி வருகிறோம்,” என்று அமித்ஷா கூறினார்.

அரசியல் வன்முறைகள் எந்தக் கட்சியைக் குறிவைத்ததாக இருந்தாலும், அவை அனைத்தையும் விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்றும் பா.ஜ.க உறுதியளித்துள்ளது. “ஊழல், அரசியல் வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பது குறித்து மூன்று வெள்ளை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும்,” என்று அமித்ஷா கூறினார்.

பா.ஜ.க தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகள்

வங்காளம் மற்றும் அதன் மக்களின் வளர்ச்சிக்காக பா.ஜ.க தேர்தல் அறிக்கை 15 வாக்குறுதிகளைப் பட்டியலிட்டுள்ளது. கட்சி அளித்துள்ள வாக்குறுதிகள் இதோ:

தேசிய பாதுகாப்பு: சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

சிறப்பு வெள்ளை அறிக்கை: டி.எம்.சி (TMC) அரசின் 15 ஆண்டுகால ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து ஒரு 'வெள்ளை அறிக்கை' வெளியிடப்படும்.

சிண்டிகேட் ராஜுக்கு முடிவு: "கட் மணி" கலாச்சாரம் மற்றும் "சிண்டிகேட் ராஜ்" (உள்ளூர் செல்வாக்குமிக்க நபர்கள் அல்லது குழுக்கள்) ஆகியவை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்: அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மத்திய அரசு இணையான அகவிலைப்படி (DA) மற்றும் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்.

வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் ஆதரவு: அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். வேலை கிடைக்கும் வரை வேலையில்லாத இளைஞர்களுக்கு 3,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

பெண்கள் பாதுகாப்பு: "துர்கா சுரக்ஷா ஸ்குவாட்" என்ற சிறப்புப் பெண்கள் போலீஸ் பட்டாலியன் உருவாக்கப்படும். அனைத்து மாநில அரசுப் பணிகளிலும் 33% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

பெண்களுக்கான நிதியுதவி: பெண்கள் சுயசார்பு அடைவதற்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

விவசாயிகள் நலன்: நெல், உருளைக்கிழங்கு மற்றும் மாம்பழ சாகுபடிக்குச் சிறப்பு அரசு உதவி வழங்கப்படும்; பயிர்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யப்படும்.

மீன்வளம் மற்றும் தொழில்துறை: ஒவ்வொரு மீனவரும் ‘பிரதான் மந்திரி மத்சய சம்பதா யோஜனா’ திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள். மேற்கு வங்கத்தை முன்னணி தொழில்துறை மையமாகவும், சிறந்த மீன் ஏற்றுமதி மாநிலமாகவும் மாற்றுதல்.

பொது சிவில் சட்டம் (UCC): பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுதல் மற்றும் கால்நடை கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தல்.

பாரம்பரிய தொழில்கள்: பழைய தேயிலைத் தோட்டங்களின் மேம்பாடு, டார்ஜிலிங் தேயிலைக்கு உலகளாவிய அங்கீகாரம் மற்றும் சணல் தொழிலை நவீனப்படுத்துதல்.

மொழி உள்ளடக்கம்: இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குட்மாலி மற்றும் ராஜ்பன்ஷி மொழிகள் சேர்க்கப்படும்.

சுகாதாரம் மற்றும் கல்வி: ஆயுஷ்மான் பாரத் திட்டம் அமல்படுத்தப்படும். பெண்களுக்கு இலவச எச்.பி.வி தடுப்பூசி மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும். வட வங்காளத்தில் புதிய எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை கட்டப்படும்.

வட வங்காளத்தில் புதிய ஐ.ஐ.டி (IIT) மற்றும் ஐ.ஐ.எம் (IIM) வளாகங்கள் நிறுவப்படும்.

கலாச்சார பாரம்பரிய மேம்பாடு: சிறப்பு "வந்தே மாதரம் அருங்காட்சியகம்" நிறுவப்படும்.

மத சுதந்திரம்: மதச் சடங்குகள் மற்றும் வழிபாடுகளுக்கான சுதந்திரத்தை உறுதி செய்யச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

source 

https://tamil.indianexpress.com/india/amit-shah-bjp-manifesto-bengal-elections-2026-uniform-civil-code-bangladesh-border-11713960