சனி, 18 ஏப்ரல், 2026

இனிமேல் தான் மெயின் பிக்சர்

 

 இனிமேல் தான் மெயின் பிக்சர் 17 4 2026 

MK Stalin xz

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆண்டிப்பட்டியில் பரப்புரை

தமிழக சட்டமன்றத் தேர்தல் அனல் பறக்க இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. ஆண்டிபட்டி பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  “பா.ஜ.க-வின் ஒன்றிய அரசு கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி என்பது சும்மா டிரெய்லர் தான் இது... அடுத்து வரப்போவதுதான் மாபெரும் வெற்றி” என்று பேசினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-stalin-andipatti-speech-delimitation-bill-defeat-ops-praise-dmk-campaign-theni-11738342


ஆண்டிப்பட்டி பரப்புரையில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:  “இயற்கை எழில் கொஞ்சும் வைகை அணையின் அழகு வரவேற்க, தேனி மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன். இன்றைக்கு நாம் எதிர்கொண்டிருப்பது வெறும் தேர்தல் களம் மட்டுமல்ல, இது ஒரு போர்க்களம்! தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்ற சொற்களைக் கேட்டாலே கசக்கும் ஒரு கூட்டம், நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதற்காகப் பல்வேறு சதிவேலைகளைச் செய்து வருகிறது.

இந்தியாவின் சில மாநிலங்களில் மதவெறியைத் தூண்டி, அதன் மூலம் நாட்டை ஆள நினைக்கும் பாசிச பா.ஜ.க அரசு செய்திருக்கும் பெரும் சூழ்ச்சிதான் 'தொகுதி மறுவரையறை'. இதன் மூலம் தென்மாநிலங்களில் தேர்தலை வெறும் சம்பிரதாயமாக மாற்றப் பார்க்கிறார்கள். பிரதமரும், உள்துறை அமைச்சரும் சொல்வது போலப் பார்த்தால், தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது போல ஒரு தோற்றம் தெரியும். ஆனால், உள்ளபடியே நமக்குக் கிடைக்க வேண்டிய நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கப் பார்க்கிறார்கள்.

இந்தச் சதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நான் கருப்புக்கொடி ஏற்றியிருந்தேன். என்னைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். முதலமைச்சர் என்ற முறையில் நான் காட்டிய எதிர்ப்பு என்பது, தனிப்பட்ட ஸ்டாலினின் எதிர்ப்பு அல்ல; அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுபூர்வமான எதிர்ப்பு!

இதனை நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு அவர்கள் குறிப்பிட்டபோது, அனைவருக்கும் பொதுவானவராக நடக்க வேண்டிய சபாநாயகர் ஓம் பிர்லா, "நீங்கள் கருப்புக்கொடி ஏற்றினால் என்ன, நீலக்கொடி ஏற்றினால் என்ன?" என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார். அவர் ஸ்டாலினை அவமதிக்கவில்லை, தமிழ்நாட்டின் குரலையும் உணர்வுகளையும் ஏளனப்படுத்தியிருக்கிறார். அவருக்குப் பதிலடியாக, நமது அருமைத் தங்கை கனிமொழி அவர்கள் நாடாளுமன்றத்தில் இன்று சரியான பதிலடி தந்துள்ளார். தமிழர்களை அவமதிப்பதையே நோக்கமாகக் கொண்ட ஓம் பிர்லா அவர்களுக்குத் தெளிவாகச் சொல்கிறேன்—இந்த மண்ணில் சமத்துவம், சமூக நீதி மற்றும் பொதுவுடைமையைப் பறைசாற்றும் நமது கருப்பு, சிவப்பு மற்றும் நீலக் கொடிகள்தான் எப்போதும் பறக்கும்!

நமது அன்புக்குரிய ஓ.பி.எஸ் (OPS) அவர்களுக்கு அறிமுகம் தேவையா? விசுவாசம் என்றால் அது ஓ.பி.எஸ் தான் என்று சொல்லும் அளவுக்கு அம்மையார் ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர். அவர் விசுவாசத்தைக் காட்டியது மட்டுமல்ல, ஒரு 'உலக மகா துரோகியை' உலகுக்கு அடையாளம் காட்டியவரும் அவர்தான். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

அதேபோல், கம்பம் தொகுதியில் ஏழாவது முறையாகப் போட்டியிடும் கம்பம் ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், ஆண்டிப்பட்டி தொகுதியில் மூன்றாவது முறையாகக் களம் காணும் மகாராஜன் அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். பெரியகுளம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும், சகோதரர் திருமாவளவன் அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் சக்திவேல் (என்ற ஆற்றலரசு) அவர்களுக்கு 'பானை' சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டுகிறேன்.

நமது திராவிட மாடல் அரசு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை அனைத்து இடங்களிலும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கி வருகிறது. குறிப்பாகத் தேனி மாவட்டத்தில் பாலாறு-பொருந்தலாறு கால்வாய் திட்டம், 18-ஆம் கால்வாய் திட்டம், சுருளியாறு மின் திட்டம், வைகை நதி மற்றும் சோத்துப்பாறை அணை சீரமைப்பு என ஏராளமான பணிகளைச் செய்துள்ளோம். இந்தப் பணிகள் மென்மேலும் தொடர நமது வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று பேசினார்.