/indian-express-tamil/media/media_files/CxVpbawVZtMF61cOOD6A.jpg)
Kilambakkam Bus Terminus | TN Assembly Election 2026 | Passengers Protest Chennai
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் ஒரு இக்கட்டான சூழல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் வாக்களிப்பதற்காக நேற்று மாலை முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. குறிப்பாக திருச்சி, மதுரை மற்றும் நெல்லை போன்ற தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். நள்ளிரவு 1:00 மணி வரை பேருந்துகள் வராததால் ஆத்திரமடைந்த பயணிகள், பேருந்து நிலையத்திற்கு வெளியே உள்ள ஜிஎஸ்டி (GST) சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
சுமார் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அதிகாலை வரை பேருந்து வசதி சீராகவில்லை. இன்று காலை 8 மணி கடந்தும் பேருந்துகள் வராததால், சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கத் திட்டமிட்டிருந்த மக்கள் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்தனர்.
"இனி ஊருக்குச் சென்றால் வாக்குப்பதிவு முடிவதற்குள் சென்றடைய முடியாது" என்ற விரக்தியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் மீண்டும் சென்னைக்கே திரும்பத் தொடங்கியுள்ளனர். இது பல்லாயிரக்கணக்கான வாக்குகள் பதிவாகாமல் போவதற்கு வழிவகுத்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்துத் துறையின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம் என்றும், தனியார் பேருந்துகள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி இரண்டு முதல் மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேருந்துகள் அனைத்தும் ஏற்கனவே தென் மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டதாகவும், நள்ளிரவு நேரத்தில் கூடுதல் தனியார் பேருந்துகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல் நீடித்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது கிளாம்பாக்கம் மற்றும் வண்டலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற ஆர்வத்துடன் வந்த மக்கள், முறையான திட்டமிடல் இல்லாததால் கண்ணீருடன் வீடு திரும்புவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/kilambakkam-bus-terminus-tn-assembly-election-2026-passengers-protest-chennai-bus-shortage-for-voters-11756235





