செவ்வாய், 14 ஏப்ரல், 2026

ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டது அமெரிக்க ராணுவம்... 'இது சட்டவிரோதம்' என ஈரான் கடும் கண்டனம்

 

ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டது அமெரிக்க ராணுவம்... 'இது சட்டவிரோதம்' என ஈரான் கடும் கண்டனம்

12 4 2026 
வாஷிங்டனுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்நாட்டின் அனைத்து துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளை அமெரிக்க ராணுவம் முற்றுகையிடத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஈரானிய துறைமுகங்களுக்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும். பெர்சிய வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள அனைத்து ஈரான் துறைமுகங்களும் கண்காணிக்கப்படும். ஈரான் அல்லாத மற்ற நாடுகளுக்குச் செல்லும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைத் தொடர அனுமதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இது ஒட்டுமொத்த ஜலசந்தியையும் மூடுவதாக ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையிலிருந்து தளர்வான முடிவாகக் கருதப்படுகிறது.

மெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முற்றுகை சர்வதேச விதிகளுக்கு எதிரானது மற்றும் சட்டவிரோதமானது; இது ஒரு கடற்கொள்ளைக்குச் சமம் என்று ஈரான் ராணுவம் சாடியுள்ளது. பெர்சிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதியில் பாதுகாப்பு என்பது அனைவருக்கும் இருக்க வேண்டும் அல்லது யாருக்கும் இருக்கக் கூடாது. எங்கள் துறைமுகங்கள் அச்சுறுத்தப்பட்டால், இப்பிராந்தியத்தில் உள்ள வேறு எந்தத் துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானில் அமெரிக்கா-ஈரான் இடையே நடந்த போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை அன்று தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்ததே இதற்குக் காரணம் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கைக்கு நேட்டோ கூட்டாளிகளான பிரிட்டன், பிரான்ஸ் ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டன.

பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், நாங்க இந்த முற்றுகையை ஆதரிக்கவில்லை. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், எங்களை இந்த போருக்குள் இழுக்க முடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது. முன்னதாக நாளொன்றுக்கு 100 முதல் 135 கப்பல்கள் வரை சென்று வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 40-ஆகக் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


source https://tamil.indianexpress.com/international/us-military-blocks-all-iranian-ports-as-trumps-hormuz-threat-takes-effect-iran-calls-it-illegal-11722812