புதன், 29 ஏப்ரல், 2026

தமிழக தேர்தல் வாக்குப் பதிவு சதவீதம்: இறுதி நிலவரத்தை இதுவரை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்காதது ஏன்?

 

தமிழக தேர்தல் வாக்குப் பதிவு சதவீதம்: இறுதி நிலவரத்தை இதுவரை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்காதது ஏன்?


கடந்த ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிந்து 24 மணி நேரத்திற்குள் வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்து 5 நாட்கள் ஆகியும், இறுதிப்புள்ளி விவரங்கள் வெளியிடாத நிலையில், இது குறித்த தகவலுக்காக அரசியல் கட்சிகள் இன்னும் காத்திருக்கின்றன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற்றது. 4 முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. அன்றைய தினத்தின் இறுதியில் வாக்குப்பதிவு 85.15% ஆக இருந்தது. 2 நாட்களுக்குப் பிறகு, மறுசரிபார்ப்பிற்குப் பின் இந்த தற்காலிக சதவீதத்தை 85.10% ஆக (0.05% குறைவு) ஆணையம் திருத்தியது. 

அதே சமயம், பாலின வாரியான விவரங்களையோ (ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்) அல்லது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையையோ அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. பல ஆண்டுகளாக தேர்தல்களைச் சந்தித்து வரும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு முக்கிய திராவிடக் கட்சிகளும், வாக்குச் சாவடி மற்றும் தொகுதி வாரியாக தங்களின் வெற்றி வாய்ப்புகளைக் கணிக்க படிவம் 17C-ஐப் பெற்றுள்ளன. ஆனால், சீமானின் நாம் தமிழர், புதிய கட்சிகளான விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) உள்ளிட்ட புதிய கட்சிகள், திராவிடக் கட்சிகளின் இந்த அனுபவத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், தபால் மற்றும் சேவை வாக்குகள் இல்லாத இறுதி அறிக்கைகளுக்காக இன்னும் காத்திருக்கின்றனர்.

இதனிடையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றுதான் இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதி காலை 8 மணி வரை நாங்கள் தபால் வாக்குகளைச் சேகரிப்போம். எனவே, அதுவரை முழுமையான அறிக்கையை வழங்க முடியாது. எங்கள் இணையதளத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் புதுப்பித்துள்ளோம். சுமார் 6 லட்சம் தபால் வாக்குகள் உள்ளதால், ஏதேனும் மாற்றம் இருந்தால் அது வெறும் 1% என்ற அளவில் மிகக் குறைவாகவே இருக்கும்," என்று மூத்த தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2025 நவம்பரில் பீகாரில் வாக்குப்பதிவு நாளன்றே பாலின வாரியான விவரங்கள் உட்பட அனைத்துத் தரவுகளையும் எப்படி வெளியிட முடிந்தது என்று கேட்டபோது, அந்த அதிகாரி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. 2 முறையுமே, வாக்குப்பதிவு நாளன்று இரவு 11 மணிக்குள் ஈவிஎம் (EVM) வாக்கு எண்ணிக்கையை ஆணையம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முழுமையான தரவுகளை வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம். ஆனால், துல்லியத்தன்மையை உறுதிப்படுத்த எண்களை மறுசரிபார்ப்பு செய்வதாகக் கூறி அவர்கள் எங்களைத் தவிர்த்து வருகின்றனர். தரவுகளில் ஏதேனும் குளறுபடிகள் இருப்பின் நீதிமன்றத்தை அணுகுவோம்," என்று தெரிவித்தார். அதேபோல், அதிமுக நிர்வாகியும், ராஜ்யசபா எம்.பியுமான இ.எஸ். இன்பாதுரை, கட்சியின் வாக்குச் சாவடி முகவர்கள் அந்தந்தப் பகுதிகளில் தரவுகளைச் சேகரித்துள்ள போதிலும், முழுமையான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-election-eci-yet-to-release-final-poll-numbers-update-in-tamil-11776828