ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி... கைவிரித்த ஈரான்; தலையை பிச்சிக்கும் அமெரிக்கா!

 

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி... கைவிரித்த ஈரான்; தலையை பிச்சிக்கும் அமெரிக்கா!


ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் 45 நாட்களை கடந்து தாக்குதல் நடத்தி வந்தது. இதையடுத்து சமீபத்தில் 2 வார தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த போரின் போது ஈரான், ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகளை புதைத்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஹோர்முஸ் நீரிணையை முடக்க ஈரான் மேற்கொண்ட முயற்சி தற்போது ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
நீர்வழியில் புதைத்த  கண்ணி வெடிகள் அனைத்தையும் ஈரான் அதிகாரிகளால்  கண்டறிந்து அகற்ற முடியவில்லை என்றும் முறையற்ற வரைபடம் மற்றும் கண்ணிவெடிகள் நீரோட்டத்தினால் இடம் பெயர்ந்து சென்றது போன்ற காரணங்களால், கடல் போக்குவரத்தை விரைவாக இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது கடினம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது இஸ்லாமாபாத்தில் நடைபெறும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை விரைவாகத் திறந்து போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா ஈரானை வலியுறுத்தி வருகிறது. ஆனால், போக்குவரத்தை அதிகரிப்பது தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் காரணமாகச் சாத்தியமற்றது என்று ஈரான் கூறியுள்ளது. 

அமைதி பேச்சுவார்த்தை

இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் குழுக்கள் சனிக்கிழமை வந்தன. இந்தப் பேச்சுவார்த்தையில் கடல்வழிப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது முதன்மையான கருத்தாக இருந்தது. போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். 

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை முறையாகக் கருத்தில் கொண்டு நீரிணை போக்குவரத்திற்குத் திறக்கப்படும் என்று கூறியிருந்தார். இருப்பினும், பாதுகாப்பான வழித்தடங்களை இன்னும் ஈரானால் உறுதி செய்ய முடியவில்லை என்பதை இது உணர்த்துவதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஏன் கண்ணி வெடிகளை அகற்ற முடியவில்லை?

கண்ணிவெடிகளைப் பொருத்துவதை விட, அவற்றை கடலில் இருந்து அகற்றுவதற்கு அதிக நேரம் ஆகும். பணியாளர்கள் ஒவ்வொரு கண்ணிவெடியும் வைக்கப்பட்ட இடத்தை பதிவு செய்யவில்லை என்றும் சில கண்ணிவெடிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், நன்கு அறியப்பட்ட கண்ணிவெடிப் பகுதிகள் கூட நம்பகத்தன்மையற்றதாகி விடுகின்றன.

அமெரிக்கக் கடற்படை கண்ணிவெடிகளை அகற்றுவதற்குச் சிறப்பு வாய்ந்த கப்பல்களைப் பயன்படுத்துகிறது, இருப்பினும் அதன் கொள்ளளவு குறைவாகவே உள்ளது. மறுபுறம், பெரிய அளவிலான கடல் பரப்பினை விரைவாகச் சுத்தம் செய்வதற்கான நவீன உபகரணங்களோ அல்லது பயிற்சியளிக்கப்பட்ட சிறப்புப் படைகளோ ஈரானிடம் இல்லை. உலகிலேயே மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான இந்த ஹோர்முஸ் நீரிணையில், முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை, பெரிய அளவிலான கப்பல் போக்குவரத்திற்கு ஈரானால் அனுமதி வழங்க முடியாது.

11 4 2026


source https://tamil.indianexpress.com/international/iran-laid-mines-in-strait-of-hormuz-now-it-cant-find-them-all-11715937