சனி, 25 ஏப்ரல், 2026

தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் சரிபார்க்கப்படும்:

 

தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் சரிபார்க்கப்படும்:




உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனுவில் சொத்து மதிப்பு விவரம் முரண்பாடு உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், “தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தாமாக முன்வந்து சரிபார்க்கப்படும். விவரங்களை சரிபார்க்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது” என்று வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில், துணை முதலமைச்சரும் தி.மு.க இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் உள்ள சொத்து விவரங்களுக்கும், அவர் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி ஆர்.குமாரவேல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் வருமான வரித் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “லோக்சபா, சட்டசபை தேர்தல்களின்போது, வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறியுள்ள சொத்து விவரங்கள் குறித்துச் சரிபார்க்க, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, நேரடி வரிகள் வாரியம் 2019-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியான பின், வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்களை, வருமான வரித்துறை தாமாக முன்வந்து சரிபார்க்கும் நடைமுறையைத் தொடங்க வேண்டும். 150 நாட்களுக்குள் சரிபார்ப்புப் பணிகளை முடிக்க வேண்டும் என நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் சொத்து விவரங்களைப் பொறுத்தவரை, விரிவான ஆய்வு செய்யாமல், 2021, 2026ம் ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்புகளை ஒப்பீட்டுப் பார்க்க முடியாது. உதயநிதி ஸ்டாலினின் நிதி குறித்த ஆவணங்கள், தற்போது வருமான வரித் துறை வசம் இல்லை.

தற்போதைய நிலையில், எந்த இறுதியான முடிவுக்கும் வர முடியாது. எனவே, ஆவணங்களை ஆய்வு செய்ய அவகாசம் வழங்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

இதையெடுத்து, இந்த வழக்கு விசாரணை ஜூன் மாதத்துக்குத் தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/it-department-reply-on-udayanidhi-stalin-asset-discrepancy-case-madras-high-court-11763410