/indian-express-tamil/media/media_files/2026/04/20/pachpadra-refinery-2026-04-20-19-12-58.jpg)
ராஜஸ்தான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து; திறப்பு விழாவிற்கு ஒருநாள் முன்னே பயங்கரம்
ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ராவில் உள்ள பச்பத்ரா சுத்திகரிப்பு நிலையத்தில் திங்கள்கிழமை மதியம் எதிர்பாராத விதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நிலையத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்க இருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுத்திகரிப்பு நிலையத்தின் கச்சா எண்ணெய் வடித்தெடுப்பு பிரிவு (CDU) அருகே இன்று ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்து காரணமாக, 21.04.2026 அன்று பிரதமர் பங்கேற்கவிருந்த விழா தள்ளிவைக்கப்படுகிறது. தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
சுத்திகரிப்பு நிலையத்தின் கச்சா எண்ணெய் வடித்தெடுப்பு பிரிவில் மதியம் சுமார் 2 மணியளவில் புகை வெளியேறுவதைப் பணியாளர்கள் கவனித்தனர். குழாய்கள் மூலம் பெறப்படும் கச்சா எண்ணெய் இங்குதான் சுத்திகரிக்கப்பட்டு மற்ற பிரிவுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டவுடன், அங்கிருந்த பாதுகாப்பு எச்சரிக்கை கருவிகள் செயல்படத் தொடங்கின. உடனடியாகப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 20 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கும், பிரதமர் மோடி உரையாற்றவிருந்த பொதுக்கூட்ட மேடைக்கும் இடையே சுமார் 800 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்துக்கான பின்னணி மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/fire-at-balotras-pachpadra-refinery-inauguration-by-pm-postponed-11747234





