புதன், 15 ஏப்ரல், 2026

ஏப்.16 முதல் இ.வி.எம்-களில் சின்னம் பதிவேற்றம்: தமிழக தேர்தல் அதிகாரி

 

ஏப்.16 முதல் இ.வி.எம்-களில் சின்னம் பதிவேற்றம்: தமிழக தேர்தல் அதிகாரி


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM), போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது சின்னங்களைப் பதிவேற்றும் பணி ஏப்.16-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை ஏற்பாட்டு முறை' மூலமாக, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாயிலாக EVM மற்றும் VVPAT கருவிகள் 2-ம் நிலை சமவாய்ப்பு (Randomization) முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்தப் பணி ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 16 வரை நடைபெறும். ஏப்.16-ம் தேதி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னங்கள் பதிவேற்றும் பணி மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் வெளிப்படையாக நடைபெறும்.

வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இயந்திரங்கள் மற்றும் இருப்பில் வைக்கப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல்கள் அனைத்து வேட்பாளர்களுக்கும் முறையாகப் பகிரப்படும். இந்தச் செயல்முறையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மட்டுமே தேர்தல் நாளன்று அந்தந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் என்று அர்ச்சனா பட்நாயக் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். தேர்தலில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில், வேட்பாளர்களின் முன்னிலையிலேயே இந்தப் பணிகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு உள்ளன.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-election-loading-of-candidate-names-and-symbols-in-evms-to-begin-on-april-16-11726434