வியாழன், 23 ஏப்ரல், 2026

24 மணிநேரம் கெடு வழங்கி தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

 Modi vs Kharge

பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி என்று விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், கார்கேவின் இந்த பேச்சு பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியை விமர்சித்த கார்கே, "அ.தி.மு.கவினர் எப்படி மோடியுடன் இணைய முடியும்? அவர் ஒரு பயங்கரவாதி. அவரோ அல்லது அவரது கட்சியோ சமத்துவம் மற்றும் நீதியில் நம்பிக்கை கொண்டவர்கள் கிடையாது. இவர்களுடன் இணைவது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும் செயலாகும்" என்று பேசினார். இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பாஜக தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்தார். தான் பிரதமரை தனிப்பட்ட முறையில் பயங்கரவாதி என்று அழைக்கவில்லை என்றும், மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மோடி அச்சுறுத்துகிறார் என்ற பொருளிலேயே அவ்வாறு குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் அவர் கையில் இருப்பதாகவும், அவர் எங்களை அச்சுறுத்துகிறார் என்பதையே தான் கூற வந்ததாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

இருப்பினும், கார்கேவின் இந்த கருத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்று கூறி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் அடங்கிய குழுவினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இந்த புகாரை விரைவாக பரிசீலித்த தேர்தல் ஆணையம், காங்கிரஸ் தலைவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரை இழிவாகப் பேசியதற்காக காங்கிரஸ் கட்சி வெட்கப்பட வேண்டும் என்றும், இதற்காக கார்கே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுகையில், தி.மு.க கூட்டணி தோல்வி பயத்தில் இருப்பதை இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காட்டுவதாகக் குறிப்பிட்டார். அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த அரசியல் தலைவர் நாட்டின் பிரதமரை இத்தகைய வார்த்தைகளால் விமர்சித்தது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



source https://tamil.indianexpress.com/india/mallikarjun-kharge-receives-ec-notice-over-terrorist-remark-against-pm-modi-11755450