source https://tamil.indianexpress.com/election/tamilnadu-assembly-election-2026-dmk-admk-manifesto-socio-economic-impacts-11755706
கட்டுரையாளர்: பெ.இராமஜெயம்
தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின் வரலாறும் சமூக பொருளாதார தாக்கமும் என்ற கோணத்தில் தேர்தல் அறிக்கைகளை கடந்த வார கட்டுரையில் அலசி ஆராய்ந்தோம். அந்த வகையில் அதன் தொடர்ச்சியாக கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக மாற்றங்களை பார்ப்போம்.
தமிழக அரசியல் நிலைப்பாடுகளின் மையமாக மாநில அளவிலான பிரச்சனைகளில் இலங்கை தமிழர் பிரச்சனையும் தேர்தல் அரசியலில் இரண்டறக் கலந்துவிட்டன. ஆனால் தேர்தல் அரசியலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமான வாக்கு வங்கியாக வடிவம் மாறவில்லை. மாறாக அது ஒரு உணர்ச்சிகரமான மொழி-இன சுயநிர்ணய அடையாள பிரச்சனையாக நிலைக் கொண்டுவிட்டது. 1985 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரச்சனையாக அனுதாபம் முன்னிறுத்தப்பட்டது. அப்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பஞ்சாப் காலிஸ்தான் பிரச்சனையால் கொல்லப்பட்டதும், தமிழ் நாட்டில் அன்றைய முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் உடல்நலம் சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேர்தல் களத்தில் மற்ற பிரச்சனைகள் பெரும் விவாதத்தை கிளப்பவில்லை. அப்போது அகில இந்திய காங்கிரஸ் (இந்திரா) - அ.இ.அ.தி.மு.க இடையே நல்லிணக்கத்துடன் கூடிய கூட்டணி அமைந்திருந்தது.
அ.இ.அ.தி.மு.க தலைவரும் முதல்வருமான எம்.ஜி.இராமசந்திரன் 1987ஆம் ஆண்டில் இறந்த பிறகு அந்த கட்சி ஜெயலலிதா மற்றும் ஜானகி என இரு அணிகளாக பிளவுபட்டு தேர்தலில் போட்டியிட்டது. அதேசமயம், ராஜிவ் காந்தி தலைமையிலான மத்திய அரசில் இத்தாலி நாட்டின் போபர்ஸ் பீரங்கிகள் இந்திய இராணுவத்திற்கு வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த பிரச்சனை தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க, மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அகில இந்திய அளவில் எதிராக மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் அடங்கிய தேசிய முன்னணி உருவாக்கப்பட்து. அப்போது ராஜிவ் காந்தி தலைமையிலான அரசின் பஞ்சாயத்து ராஜ் சட்டத் திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. மேலும், மண்டல் கமிஷன் அறிக்கை பரிந்துரைத்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த மூன்று முக்கிய பிரச்சினைகள், அடுத்ததாக 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமைந்தது. அந்த தேர்தலில் தி.மு.க தேர்தல் அறிக்கை மிகவும் பிரபலமானது. அப்போதுதான், விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம், 10 ஆம் வகுப்பு வரை படித்த பெண்கள் திருமணம் செய்ய ரூ. 5000 வழங்கும் திட்டம், வருடத்தில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் போன்ற திட்டங்கள் அறிவித்து, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
இந்திரா காந்தியால் 1975 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை மிகவும் துணிச்சலுடன் எதிர்த்து போராடிய திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு 13 ஆண்டுகள் கழித்து, 1989 ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் விடுதலை புலிகள் நடமாட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக 1991ல் மீண்டும் கலைக்கப்பட்டது. அதற்கடுத்த தேர்தலில் தி.மு.க, 1989ல் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்தல் அறிக்கையை சாதனையை மீண்டும் முன்வைத்தது. ஆனால் ஒன்றுபட்ட அ.இ.அ.தி.மு.க மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கூட்டணி பலம் களத்தில் தேர்தல் அறிக்கையை முன்னிறுத்தாமல் இலங்கை தமிழர்களுக்காக போராடிய ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா சென்னையில் படுகொலை செய்யப்பட்டதும், சட்டமன்றத்தில் அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா தாக்கப்பட்டதும் பரவாலான பரப்புரையாக்கப்பட்டது. அதேசமயம், பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் கொல்லப்பட்ட துயர சம்பவம், அதைத் தொடர்ந்து தி.மு.க தலைவர்கள் மீது நடைபெற்ற வன்முறை தேர்தலின் போக்கை மாற்றி அமைத்தது. தமிழ் நாடு சட்டமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சி இல்லாத நிலை உருவானது.
1991-1996ல் அ.தி.மு.க அரசு பல்வேறு ஊழல், நிதி முறைகேட்டில் முதல்வரான ஜெயலலிதா உள்பட பெரும்பாலான அமைச்சர்களும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார்கள். அத்துடன் வடக்கு மாவட்டங்களில் வன்னியர் – தலித் மற்றும் தென் மாவட்ட முக்குலத்தோர்- தலித்துகளுக்கிடையிலான சாதி கலவரங்கள், ஆட்சி மீது அதிருப்தி ஏற்படுத்தியது. அதனால், 1996ஆம் ஆண்டில் நடைபெற இருந்த தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் அ.இ.அ.தி.மு.கவுடன் மீண்டும் கூட்டணி சேர வேண்டாம் என்று தேசிய தலைமைக்கு வேண்டுகோளை வைத்தனர். ஆனால், அதையும் மீறி கூட்டணி வைத்ததால் தமிழ்நாட்டில் அகில இந்திய காங்கிரஸ் பிளவுபட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி "வளமான தமிழகம்; வலிமையான பாரதம்" என்று மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம், தேசியவாத அரசியலில் தனது 'காங்கிரஸ்' நிலைப்பாட்டை முழக்கத்தை முன்வைத்து ஜி.கே.மூப்பனார் தலைமையில், ப.சிதம்பரம், அருணாசலம், பீட்டர் அல்போன்ஸ், அடைக்கல ராஜ், ஜெயந்தி நடராஜன் உள்ளிட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் கட்டுக்கோப்பாக நின்று உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் திருப்பு முனைகளில் மிக முக்கியமான ஒன்று.
ஆனாலும், தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்த கூட்டுறவு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அமையப்பெற்ற அரசியலமைப்புச் சட்டத்தின் 73 ஆவது சட்டத் திருத்தத்தின்படி, பட்டியலின மக்கள் மற்றும் பெண்கள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தேர்தல், மகப்பேறு நலத்திட்ட உதவி, திருமண நிதி உதவித் திட்டம், மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இந்த தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் கூட்டணி அரசின் மூலம் ஏற்படும் பல்வேறு மாநிலங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், சமூக- பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்து அரசியல் பார்வைகள் மாறத் தொடங்கின. அது 2000க்கு பிறகு இந்திய அரசியலில் கூட்டாட்சி தத்துவம், பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம், மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய பல தருணங்கள் குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியது.
இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது 2006 தமிழ் நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தி.மு.கவின் 2006 சட்ட மன்றத்த் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது. அப்போதுதான் முதன் முதலாக ஒரு கிலோ அரிசி விலை ரூ.2/-க்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அத்துடன் நில்லாமல், வீடுதோறும் இலவச வண்ண தொலைகாட்சி, குடும்பத் தலைவிகளுக்கு எல்.பி.ஜி (LPG) காஸ் சிலிண்டர் இணைப்புடன் கூடிய இலவச அடுப்பு வழங்கும் திட்டமும் பெரும் பேசு பொருளாக மாறியது. அந்த தேர்தலில் தி.மு.கவின் வெற்றி நாயகனாக (Hero of the Election) அதன் தேர்தல் அறிக்கை பாராட்டப்பட்டது. அதுவரை மக்களின் அன்றாட தேவைகளில் இருந்து நலத் திட்டங்கள் தொழில்நுட்ப நுகர்வு பொருள்களை நோக்கி நகர்ந்தன. ஏனென்றால் கல்விக் கூடங்கள், சாலை வசதிகள், மருத்துவ மனைகள் உள்ளிட்ட சமூக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஓரளவுக்கு கிராம புறங்களில் தன்னிறைவு பெற்றிருந்ததால் இலவச திட்டங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. ஆனால் இந்த திட்டம் பெரும் விமர்சனகளையும் ஈர்த்தது. காரணம், வண்ண தொலைக்காட்சி பெட்டி ஒரு நுகர்வு கலாச்சாரப் பொருள், அதில் மக்களுக்கு பயன்தரத் தக்க பெரிய நலன் இல்லை என்று விமர்சனம் எழுந்தது. அதன் பின்னரும் அதே வழியில் பயணித்து ஒஎறு கிலோ அரிசி ரூ.1க்கும்; பிறகு இலவசமாக 25 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதன் அருமை வளமான காலங்களில் தெரியாவிட்டாலும் கொரோனா பெருந்தொற்று, மழை வெள்ள புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் ஏழைகளின் துயர் துடைக்க பசி, பட்டினியை முறியடிக்க, உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
அதைத் தொடர்ந்து 2011 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அ.இ.அ.தி.மு.க வேறு ஒரு பிரம்மாஸ்திரத்தை கையிலெடுத்தது. அந்த தேர்தலில் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், +2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் 9, 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் எனப் பெரிய அளவில் இலவச திட்டங்கள் வழங்கி இளைய தலைமுறை மத்தியில் அரசின் நலத் திட்ட பணிகளை பதிய வைத்தது. இந்த திட்டங்கள் இன்று வரை தொடர்கின்றன. அதனை அடுத்து 2016 தேர்தலில் அதிக விவாதத்தை கிளப்பியது மதுபான வியாபாரம். 2003 ஆம் ஆண்டு அரசு மதுபானக் கடைகளை கூட்டுறவு மூலமும், ஆயத்தீர்வை மூலமாக டாஸ்மாக் (TASMAC) நிறுவப்பட்டு அரசு கட்டுப்பாட்டில் மது விற்பனை நிலையனகள் திறக்கப்பட்டன. இது பெரும் குழப்பத்தையும், சமூக சிக்கல்களும் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்களும் அதிகரிக்கக் காரணமாக பேசப்பட்டது. அதனால் தி.மு.க மதுவிலக்கை முன்வைத்தது 2016 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் 1.15 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை கண்டது. தி.மு.கவின் தோல்விக்கு பல்வேறு உட்கட்சி, கூட்டணி பிரச்சனை காரணங்களாக இருந்தாலும் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியும் அதற்கு பங்களித்ததாக பேசப்பட்டது. ஆனால் அதற்கு எந்த புள்ளிவிவரங்களும் தரவுகளும் இல்லை.
சட்டமன்றத் தேர்தல்கள் 2011 மற்றும் 2016 இரண்டும் அ.இஅ.தி.மு.கவுக்கு வெற்றியைத் தேடித்தந்தது அதன் கூட்டணி கட்சிகளும், களத்தில் தேர்தல் அறிக்கையின் செயல்பாடுகளும் தான். கடந்த 2021 தேர்தலை தி.மு.க மிகவும் கவனமாக அணுகியது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கி தமிழ்நாடு முழுமைக்கும் பயணம் செய்து மாவட்ட அளவில் கட்சி பிரமுகர்கள், பொது மக்கள், தன்னார்வ அமைப்புகள்/ தொண்டு நிறுவனங்கள் எனப் பல மட்டங்களில் கலந்தாலோசிக்கப்பட்டு தேர்தல் அறிக்கை பெரிய தொகுப்பாக துறை வாரியான வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து பல்வேறு உறுதிமொழிகளுடன் வெளியிட்டது. அது தான் இன்றைக்கு பேசு பொருளாகவும் தி.மு.கவின் எதிகால பயணத்தையும் நிர்ணயிக்கிறது.
அதன் வடிவில் இந்த இலவச திட்டங்களை எல்லாம் மிகவும் பிற்போக்கானதாக சித்தரித்து எள்ளி நகையாடப்பட்ட தேர்தல் அறிக்கைகள் வட மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த திட்டங்கள் உத்திர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி இலவச சைக்கிள்களையும் மடிக் கணிணிகளையும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி தேசிய அங்கீகாரம் பெற்றது. தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி நடைமுறைப்படுத்தி பெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிட்டத்தக்கது. எனவே தேர்தல் அறிக்கை என்பது வாக்குகளைக் கவரும் ஒரு ஆவணமாகவும், கட்சிகளின் செயல் திட்டங்களாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஒரு தெளிவான நோக்கக் குறிப்பாக இருப்பது சிறந்த ஆட்சிகளுக்கான ஒரு வரையறை என்றே சொல்லலாம்.
ஆனால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படும் ‘இலவசங்கள்’ மக்களை உழைப்பிலிருந்து வெளியேற்றுகிறது என்ற அபவாதத்தை சில பத்திரிகை, ஊடகவியலாளர்கள், சமூக பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொது வெளியில் உரையாடல்கள் நடத்தும் அறிவுஜீவிகள் முன்வைத்தனர். அது குறித்து பலவிதமான கருத்துகளும், எதிர் கருத்துகளும் பொது வெளியில் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இந்திய நாட்டின் பொருளாதார சூழல் எல்லா காலங்களிலும் ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்து இருக்கும். அதுவும் பன்னாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் சார்ந்த சந்தை, உற்பத்தியில் ஒரு நிலையற்ற பொருளாதார நிலையைக் கொண்டிருக்கும்போது மக்களுக்கு வழங்கப்படும் இலவச திட்டங்களால் பொருளாதாரம் மேலும் நலிவடையக் கூடும் என்று நியாயம் கற்பிக்கப்பட்டது. ஆனால அதேசமயம், பெரு வணிக நிறுவனகளுக்கு வழங்கப்படும் வரிச் சலுகை, வரி விலக்கை ஒப்பிடும்போது இந்த இலவச திட்டங்களுக்கான செலவுகள் குறைவு. மேலும் இது மக்களிடையே பெரிய சமூக நிலை மாற்றத்திற்கான தாக்கத்தையும் உளவியல் சிக்கலில் இருந்தும் எளிய மக்களை விடுபட செய்கிறது என்று பல்வேறு விதமான வாதப் பிரதி வாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் பெருமளவில் விமர்சனங்களை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படும் இலவச திட்டங்கள் சந்தித்தன.
ஆனால் இறுதியில் இலவச திட்டங்கள் வென்று நிற்கின்றன.
அதே நேரத்தில் விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை, புதுமை பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்களும் சமூக பொருளாதார மேம்பாட்டை தாண்டி கல்வி வேலைவாய்ப்பின் மூலமாக அடுத்த தலைமுறையின் தேவையை நிவர்த்தி செய்கிறது. ஏனென்றால், மனித வளர்ச்சிக் குறியீடுகளை மேம்படுத்துவதிலும் நீடித்த நிலையான வளர்ச்சிகளுக்கான குறிக்கோள் இலக்குகளை அடைய அரசின் பலவேறு திட்டங்கள் பங்களிக்கின்றன. அதன்படி இன்றைக்கு தேர்தல் அறிக்கைக்கு அப்பாற்பட்டு துவங்கிய திட்டங்களான எம்.ஜி.ஆர். துவங்கிய மதிய உணவு திட்டமும் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த காலை உணவு திட்டம் கல்வியில் உணவின் தேவையை உணர்த்தி களத்தில் நிற்கின்றன. தமிழ்நாடு அரசியலில் தேர்தல் வாக்குறுதிகளிலும் தேர்தல் அல்லாத காலத்தில் உருவாகும் சமூக நல தேவையையும் சீர்தூக்கி பார்த்து திட்டங்களை அமல்படுத்தி அனைவருக்குமான வளர்ச்சி பாதை என்பதை நோக்கி பயணிக்கிறது.
பெ.இராமஜெயம்,
உதவிப் பேராசிரியர்,
சமூக உள்ளடக்கக் கொள்கை ஆய்வு மையம்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி.





