சனி, 25 ஏப்ரல், 2026

நரகக் குழி'... இந்தியாவை விமர்சித்த டிரம்ப்;

 இந்தியாவையும் சீனாவையும் "பூமியில் உள்ள நரகம்" என்று வர்ணிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்த கருத்துக்கு கடும் எதிர்வினைகள் கிளம்பி வருகிறது. டிரம்ப்பின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களை இந்தியா தெரிவித்திருக்கிறது. இந்த கருத்துக்கள் "அறிவற்றவை" மற்றும் "மிகவும் தரம் தாழ்ந்தவை" என இந்திய வெளியுறவு அமைச்சகம் சாடியுள்ளது.

23 4 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை பற்றி பழமைவாத எழுத்தாளரும் வானொலி தொகுப்பாளருமான மைக்கேல் சாவேஜ் எழுதிய ஒரு சர்ச்சைக்குரிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். அதில், புலம்பெயர்ந்தோர் கர்ப்பத்தின் "ஒன்பதாவது மாதத்தில்" அமெரிக்காவிற்கு வருவதன் மூலம் உள்ளூர் சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள, தற்போதைய சட்டங்கள் அனுமதிக்கின்றன என்று சாவேஜ் விமர்சித்துள்ளார்.

டிரம்ப் பகிர்ந்த மைக்கேல் சாவேஜின் அறிக்கையில், "இங்கே ஒரு குழந்தை பிறந்ததும் குடிமகனாகிறது. பின்னர் அவர்கள் சீனா அல்லது இந்தியா அல்லது உலகின் ஏதோ ஒரு நரகக் குழியிலிருந்து முழு குடும்பத்தையும் அழைத்து வருகிறார்கள். அதைக் காண நீங்கள் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. இங்கே இப்போது ஆங்கிலம் பேசப்படுவதில்லை"என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்பின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. மும்பையில் அமைந்துள்ள ஈரான் துணைத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் மும்பையின் புகழ்பெற்ற கணேசா உத்சவத்தின் பல்வேறு காட்சிகளைக் காட்டும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது. அந்தப் பதிவில், "யாராவது டிரம்பிற்கு கலாசார ரீதியாகத் தெளிவுபெற ஒரு பயணத்தை முன்பதிவு செய்ய வேண்டும். அது ஒருவேளை அவரது அறியாமையை கொஞ்சம் குறைக்கக் கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் ஐதராபாத்தில் உள்ள ஈரானிய துணை தூதரகம், மும்பை தூதரகத்தின் பதிவைப் பகிர்ந்து, "மும்பையில் எங்களுக்குப் பிடித்தவை என்ன? டீயுடன் பன் மஸ்கா, வடை பாவ் மற்றும் பாவ் பாஜி போன்ற இவை மூன்றும் ஒரு மோசமான நாளை சரிசெய்யக் கூடியவை. நாங்கள் ரொட்டியையும் மரியாதையையும் நம்புகிறோம், ஆனால் தென்னிந்தியாவிற்குள் நுழைந்துவிட்டால்... அது ஒரு தனி ரகம். இந்தியா தனது 'சொர்க்க நிலையை' அடைந்தது போல இருக்கும். அது இன்னும் அழகானது"என்று கூறியுள்ளது. 

ஈரானிய துணைத் தூதரகம் மற்றொரு பதிவில், "சீனாவும் இந்தியாவும் நாகரிகத்தின் தொட்டில்களாக இருந்துள்ளன. உண்மையில், நரகம் என்பது போர்-குற்றவாளியான அதிபர், இரானின் நாகரிகத்தை அழிப்பதாக அச்சுறுத்தும் இடமாகும்"என்று கூறியிருக்கிறது.



source https://tamil.indianexpress.com/international/iran-cultural-detox-jibe-at-trump-over-hell-hole-remark-tamil-news-11760914