சனி, 25 ஏப்ரல், 2026

திருச்சி மாவட்டத்தில் 2 வாக்கு எண்ணும் மையங்கள்; மின்னணு எந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு ; 4 அடுக்கு பாதுகாப்பு

 

திருச்சி மாவட்டத்தில் 2 வாக்கு என்னும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு எந்திரங்கள் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் வெள்ளிக்கிமை பூட்டி சீல் வைக்கப்பட்டன. இது குறித்த விபரம் வருமாறு;

திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணச்சநல்லூர், மணப்பாறை லால்குடி, துறையூர், முசிறி, ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளில் வியாழக்கிழமை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 21 லட்சத்து 47 ஆயிரத்து 051 வாக்காளர்களில் நேற்று 18 லட்சத்து 34 ஆயிரத்து 483 பேர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

trichy strong room

இந்த தேர்தலில் பெண்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். கடந்த தேர்தலை ஒப்பிடும்போது 11.89 சதவீதம் வாக்கு அதிகமாக பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில வாக்குச்சாவடி மையங்களில் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் பதிவான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பச்சைமலை போன்ற மலைப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இருந்த எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு எடுத்துச் செல்வதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனால் விடிய விடிய வாக்கு என்னும் மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. 

trichy strong room

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரம்பூர், மணப்பாறை, ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. 

இதேபோன்று மணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான புலிவலம் ஒயா சிஸ் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

பச்சைமலை போன்ற மலைப்பகுதியில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவதற்கு தாமதம் ஆகியுள்ளதால் வெள்ளிக்கிழமை துறையூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி சீல் வைப்பதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.  வாக்கு எண்ணும் மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரும் பணி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை நடைபெற்றன.

trichy strong room

அதன் பின்னர் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் பார்வையாளர்கள், மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

பின்னர், துணை இராணுவ கட்டுப்பாட்டில் வாக்கு என்னும் மையங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும், அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. உள்ளூர் போலீசார், ஆயுதப்படை போலீசார், சிறப்பு காவல் படையினர் மற்றும் துணை ராணுவ படையினர் அடங்கிய 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

trichy strong room

முன்னதாக வாக்கு எண்ணும் பத்திரிக்கையாளர்கள் முறைப்படி அனுமதி பாசுடன் சென்று அந்தக் காட்சிகளை பதிவு செய்யும்போது, அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த  திருச்சி தெற்கு துணை ஆணையர் பத்திரிக்கையாளர்களுடன் ஒருமையில் பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த அநாகரீக செயலுக்கு திருச்சி பிரஸ் கிளப் நமது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-election-2026-evm-sealed-jamal-mohamed-oasys-college-security-police-press-club-condemnation-11763392