ஜாமின் நிபந்தனையாக பாஸ்போர்ட் முடக்க முடியாது: ஐகோர்ட்
தகாத வார்த்தைகளால் திட்டுதல் (294-b), ஏமாற்றுதல் (417) மற்றும் மிரட்டல் விடுத்தல் (506-i) ஆகிய பிரிவுகளின் கீழ் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் 2025 டிசம்பரில் கைது செய்யப்பட்டு, 2026 ஜனவரியில் ஜாமீன் பெற்றார். இருப்பினும், செஷன்ஸ் நீதிமன்றம் அவரது ஜாமீன் நிபந்தனைகளை மாற்றியமைத்தது. அதன்படி அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது. பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வாரம் ஒருமுறை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இந்த நிபந்தனைகளை எதிர்த்து, அந்த நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பாஸ்போர்ட்டை ஒப்படைக்கச் சொல்வது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை (Article 21) மீறுவதாகும் என்று அவர் வாதிட்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபால், கடந்த ஏப்.6-ஆம் தேதி தனது உத்தரவை வழங்கினார். அவரது தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்; குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 104-ன் கீழ், ஒரு ஆவணத்தை முடக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருந்தாலும், அது பாஸ்போர்ட்டிற்கு பொருந்தாது. பாஸ்போர்ட் சட்டம் என்பது ஒரு 'சிறப்புச் சட்டம்' (Special Law). இது பொதுவான சட்டங்களை விட மேலானது. பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு மட்டுமே ஒருவரது பாஸ்போர்ட்டை முடக்கும் அதிகாரம் உள்ளது. ஜாமீன் வழங்கும் போது அத்தகைய நிபந்தனையை நீதிமன்றங்கள் விதிக்க முடியாது.





