வியாழன், 23 ஏப்ரல், 2026

மேற்கு வங்க தேர்தல்: வாக்காளர் பட்டியல் திருத்தம் முதல் மத்திய அமைப்புகளின் சோதனை வரை- மம்தா முன் இருக்கும் இமாலய சவால்கள்

 West Bengal Assembly Election 2026 Mamata Banerjee vs BJP TMC vs BJP Bengal Voter Deletion SIR

West Bengal Assembly Election 2026 | Mamata Banerjee vs BJP

எழுதியவர்கள்: ரவிக் பட்டாச்சார்யாஅத்ரி மித்ரா

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடக்கும் நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிக்க இலக்கு வைத்துள்ளது. இருப்பினும், அந்த கட்சி முன்னெப்போதும் இல்லாத சில சவால்களைச் சந்தித்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்னின்று நடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தீவிரப் பிரச்சாரத்தால் திரிணாமுல் காங்கிரஸ் கடும் போட்டியை எதிர்கொள்கிறது.

ஆங்கிலத்தில் வாசிக்க

2019 மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் காலூன்றிய பாஜக, 42 இடங்களில் 18 இடங்களைக் கைப்பற்றியது (திரிணாமுல் 22 இடங்கள்). இருப்பினும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 294 இடங்களில் 215 இடங்களை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது (பாஜக 77 இடங்கள்).

2021 முதல் நடந்த 21 இடைத்தேர்தல்களில் 20-ல் திரிணாமுல் வெற்றி பெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் 29 இடங்களையும், பாஜக 12 இடங்களையும் வென்றன. முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.

15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகு திரிணாமுல் சந்திக்கும் முக்கிய சவால் ‘ஆட்சி எதிர்ப்பு’ (Anti-incumbency) அலையாகும். பள்ளி வேலைவாய்ப்பு, பொது விநியோகத் திட்டம், நிலக்கரி மற்றும் கால்நடை கடத்தல் போன்ற பல்வேறு முறைகேடுகளில் திரிணாமுல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் இதற்கு முக்கியக் காரணமாகும்.

பார்த்தா சாட்டர்ஜி மற்றும் ஜோதிப்ரியா மல்லிக் போன்ற மூத்த அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். வலுவான கட்சித் தலைவரான அனுப்ரதா மொண்டல் கால்நடை கடத்தல் வழக்கில் கைதானார். இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் சர்ச்சைக்குரிய சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) மற்றும் லட்சக்கணக்கான வாக்காளர் பெயர்கள் நீக்கம் போன்ற விவகாரங்களால் ஊழல் புகார்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக திரிணாமுல் நம்புகிறது.

விசாரணை அமைப்புகளின் பிடியில்

தேர்தல் நெருங்கும் வேளையில், தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸ், உணவுத் துறை அமைச்சர் ரதின் கோஷ் உள்ளிட்ட பல வேட்பாளர்கள் மீதான விசாரணையை அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ. தீவிரப்படுத்தியுள்ளன. மேலும், நிலக்கரி ஊழல் தொடர்பாகத் திரிணாமுலின் தேர்தல் பிரச்சாரத்தை கவனிக்கும் ஐ-பேக் (I-PAC) நிறுவனத்தின் மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தனது பாதுகாப்பு அதிகாரியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையைச் சுட்டிக்காட்டி மம்தா பேசுகையில், "அவர்கள் என்னைக் கொல்ல விரும்புகிறார்களா? என்னைக் கொல்வதன் மூலம் மேற்கு வங்கத்தை வெல்ல முடியும் என்று அவர்கள் நினைத்தால், அதையும் முயற்சி செய்யலாம்," என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து 27 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் சார்பாகத் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் திரிணாமுல் குற்றம் சாட்டுகிறது. ஆனால், கள்ள ஓட்டுகளைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை என பாஜக கூறுகிறது. இந்த வாக்காளர் நீக்கம் தனக்குச் சாதகமாக அமையும் என மம்தா பானர்ஜி நம்புகிறார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்தது. இது வங்காளத்தைக் கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சி என மம்தா கூற, நியாயமான தேர்தலுக்காக இது அவசியம் என பாஜக கூறுகிறது.

சுமார் 30% மக்கள் தொகையைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வது மம்தாவுக்குப் பெரும் சவாலாக உள்ளது. ஓபிசி பட்டியல், வக்ஃப் சட்டம் போன்ற விவகாரங்களால் ஒரு தரப்பினர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்து வாக்குகளைப் பெருமளவில் திரட்ட பாஜக முயற்சித்து வருகிறது.

மம்தா பானர்ஜி தனது சொந்தத் தொகுதியான பவானிபூரிலும் கடும் சோதனையைச் சந்தித்து வருகிறார். அங்கு அவரை எதிர்த்து பாஜக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி களம் இறங்கியுள்ளார். பவானிபூர் தொகுதியில் சுமார் 51,000 வாக்காளர் பெயர்கள் (21%) நீக்கப்பட்டுள்ளன. இது மம்தாவுக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. இதனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது தொகுதியில் அவர் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.



source https://tamil.indianexpress.com/india/west-bengal-assembly-election-2026-mamata-banerjee-vs-bjp-tmc-vs-bjp-bengal-voter-deletion-sir-11756264