இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) எழுதும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் பயோமெட்ரிக் (Aadhaar biometric) விவரங்களைப் புதுப்பித்து வைத்திருக்குமாறு தேசிய தேர்வு முகமை (NTA), அறிவுறுத்தியுள்ளது. தேர்வு நடைபெறும் நாளில், தேர்வு மையங்களில் எவ்வித தடையுமின்றி பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்வதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.
26 4 2026
தேர்வு மையத்தில் சுமூகமான பயோமெட்ரிக் சரிபார்ப்பிற்கு இது அவசியமானது" என்று குறிப்பிட்டுள்ள தேர்வு வாரியம் "தேவைப்பட்டால், தேர்வர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஆதார் சேவா மையத்திற்குச் சென்று முன்கூட்டியே தங்களது விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்" என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், யு.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) வழிகாட்டுதல்களின்படி, ஒரு குழந்தைக்கு 15 வயது பூர்த்தியாகும்போது ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும். 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்தப் புதுப்பித்தல் செயல்முறை முற்றிலும் இலவசமாகும். தேர்வர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஆதார் பதிவு மையங்களை uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கண்டறியலாம்.
பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், முகவரி மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் துல்லியமாக இருப்பது அவசியம். இது பதிவு அல்லது சரிபார்ப்புச் செயல்பாட்டின் போது ஏற்படக்கூடிய குளறுபடிகளைத் தவிர்க்க உதவும். ஆதார் தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கான யு.டி.ஐ.டீ (UDID) அட்டை மற்றும் சாதிச் சான்றிதழ்கள் (EWS/SC/ST/OBC-NCL) போன்றவை செல்லுபடியாகும் நிலையில் இருப்பதையும், புதுப்பிக்கப்பட்டிருப்பதையும் தேர்வர்கள் உறுதி செய்ய வேண்டும். நீட் யுஜி 2026 தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 27, காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மையத்திற்கு ஹால் டிக்கெட் கொண்டு வருவது கட்டாயம்; அது இல்லையெனில் தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமையை மாதிரித் தேர்வுகள் எழுத அல்லது பாடங்களைத் திருப்புதல் செய்யப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீட் யுஜி 2026 தேர்வு மே 3 அன்று நாடு முழுவதும் 552 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடைபெற உள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/nta-advises-to-neet-ug-2026-candidates-for-aadhaar-biometric-details-update-11768760





