மத்திய கிழக்கில் குவியும் போர் கப்பல்கள்... அமெரிக்கா சொன்ன அதிர்ச்சி தகவல்; டிரம்பின் மாஸ்டர் பிளான் இதுதான் 18 04 2026
/indian-express-tamil/media/media_files/2026/04/18/america-2026-04-18-08-34-22.jpg)
ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையானது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 20-ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா தனது மிகவும் வலிமையான விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றான யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். போர்டை (USS Gerald R. Ford) மீண்டும் மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளதாக அசோசியேட் பிரஸ் (Associated Press) தெரிவித்துள்ளது.
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் இயங்கி வந்த இந்த விமானம் தாங்கி கப்பல், தற்போது சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்குள் நுழைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது. இக்கப்பலுடன் யு.எஸ்.எஸ் மகான் (USS Mahan) மற்றும் யு.எஸ்.எஸ் வின்ஸ்டன் எஸ் சர்சில் (USS Winston S. Churchill) ஆகிய இரண்டு போர்க்கப்பல்களும் உடன் சென்றுள்ளது.
சலவை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, பழுதுபார்ப்பதற்காக துறைமுகத்திற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த விமானம் தாங்கி கப்பல் மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக செலவிட்ட பிறகு இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. என்னதான் பின்னடைவு இருந்தாலும் வியட்நாம் போருக்குப் பிறகு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களில் மிக நீண்ட காலம் பணியில் இருந்ததற்கான சாதனையை ஃபோர்டு சமீபத்தில் படைத்துள்ளது.
இதன் வருகையின் மூலம், தற்போது இப்பிராந்தியத்தில் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) தற்போது அரபிக்கடல் பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளது. அதேவேளையில், மூன்றாவது விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் (USS George H. W. Bush) கப்பலும் இந்தப் பகுதியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அது தற்போது தென்னாப்பிரிக்கக் கடற்கரைக்கு அப்பால் இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் இந்த கடற்படை இருப்பு, அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், இந்த பணி குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரிகள் வழங்கவில்லை.





