புதன், 6 மே, 2026

கூட்டணி முடிந்து விட்டது

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி-யும், அக்கட்சியின் மக்களவை கொறடாவுமான மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் என்பது தி.மு.க தலைமையிலான அரசுக்கு எதிரான தீர்ப்பு மட்டுமல்ல, தமிழகத்திற்குள் வெறுப்பு அரசியல் நுழைவதை நிராகரித்த ஒரு முடிவும் கூட என்கிறார் மாணிக்கம் தாகூர். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் த.வெ.க, பா.ஜ.க-வுடன் கைகோர்க்கவில்லை என்று சுட்டிக்காட்டும் அவர், தமிழகத்தின் மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாக்க காங்கிரஸ் எத்தகைய முடிவையும் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

கேள்வி: தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு என்ன நேர்ந்தது?

இந்த வாக்குகள் அரசாங்கத்திற்கு எதிரானது. மக்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். தி.மு.க ஆளும் கட்சியாக இருந்தது. நாங்கள் கூட்டணியில் இருந்தோம், ஆனால் ஆட்சியில் பங்கு வகிக்கவில்லை. மக்கள் தி.மு.க-வை நிராகரித்தபோது, கூட்டணியில் இருந்த எங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதே கூட்டணி, இப்போது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம் ஆட்சிக்கு எதிரான மனநிலை மற்றும் த.வெ.க-வின் எழுச்சிதான்.


கேள்வி: அரசுக்கு எதிராக இத்தகைய எதிர்ப்பு அலை இருப்பதை கூட்டணியால் முன்கூட்டியே உணர முடியவில்லையா?

2025-ல் பா.ஜ.க தனது மாநிலத் தலைவரை மாற்றியபோது, எடப்பாடி பழனிசாமியுடன் (அ.தி.மு.க) கூட்டணி அமைத்தது. அமித் ஷா அதனை முன்னெடுத்த விதம் தமிழக மக்களுக்குப் பிடிக்கவில்லை. அதே வேளையில் விஜய் அவர்களின் எழுச்சியும் உறுதியானது. அடிமட்டத்தில் அவருக்கான ஆதரவு அப்போதே பெருகத் தொடங்கியது. சாதி, மதத் தடைகளைத் தாண்டி இளைஞர்கள், அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் அவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. 45 வயதுக்குட்பட்டவர்களின் ஆதரவு அவருக்கு முழுமையாக இருந்தது. அதுதான் இப்போது வாக்குகளாக மாறியுள்ளது.

கேள்வி: தி.மு.க-வுக்கு எதிராக அதிருப்தி இருந்தது, ஆனால் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியால் அந்தப் பலனை அறுவடை செய்ய முடியவில்லை, அதற்கு பதிலாக விஜய் அந்த இடத்தைக் கைப்பற்றிவிட்டார் என்று சொல்கிறீர்களா?

பதில்: தமிழகத்தில் எப்போதுமே திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக சுமார் 40% வாக்கு வங்கி (மாற்று அரசியல் களம்) இருந்து வந்துள்ளது. மீதமுள்ள 60% இடத்தை இரு திராவிடக் கட்சிகளும் ஆக்கிரமித்திருந்தன. 1989-ல் காங்கிரஸ் அந்த 40% இடத்தை பிடிக்க முயன்றது. பின்னர் 2006-ல் விஜயகாந்த் முயன்றார். அதற்குப் பிறகு யாரும் அந்த இடத்தை நோக்கித் தீவிரமாகச் செயல்படவில்லை. இந்த முறை மக்கள் செல்வாக்குள்ள ஒரு நபர் (விஜய்) மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடிந்தது. அதனால் அவரால் இந்த மாற்றத்தைக் கொண்டு வர முடிந்தது.

கேள்வி: சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸும் த.வெ.க-வும் கூட்டணி வைக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்ததே, அப்படி நடந்திருந்தால் நிலைமை மாறியிருக்குமா?

பதில்: நாம் அப்படிப் பார்க்கக் கூடாது. காங்கிரஸ் ஒரு 140 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட கட்சி. எங்களுக்கென்று முடிவெடுக்கும் நடைமுறைகள் உள்ளன. இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது ஆலோசனைகள் நடக்கும். அப்போதும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. எங்களிடம் கருத்து கேட்டபோது, தரவுகளுடன் எங்க கருத்துக்களைச் சொன்னோம். ஆனால் இறுதியாக காங்கிரஸ் தலைவர் ஒரு முடிவை எடுத்தார். அது கட்சிக்கு நல்லது செய்யும் என்ற நோக்கத்திலேயே எடுக்கப்பட்டது. இப்போது அதை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.

கேள்வி: த.வெ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்த ராகுல் காந்தி ஆதரவாக இருந்தாரா?

பதில்: அவரும் அந்த ஆலோசனை நடைமுறையில் ஒரு அங்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைவர், எதிர்க்கட்சித் தலைவரிடம் (ராகுல் காந்தி) ஆலோசனை நடத்தினார். எனவே, அந்த ஆலோசனையில் என்ன நடந்தது என்பது குறித்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது.

கேள்வி: த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உள்ளது, ஆனால் பெரும்பான்மைக்குச் சில இடங்கள் குறைவாக உள்ளது. காங்கிரஸிடம் 5 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். காங்கிரஸ் த.வெ.க-வை ஆதரிக்குமா?

பதில்: மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். மோடி, அமித் ஷா, பழனிசாமி இணைந்திருந்த தே.ஜ.கூட்டணியை மக்கள் நிராகரித்து உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 4 எம்.எல்.ஏ-க்களை வைத்திருந்த பா.ஜ.க இப்போது 1 ஆகக் குறைந்துள்ளது. அ.தி.மு.க-வின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. என் பார்வையில், வெறுப்பு அரசியல் தமிழகத்திற்குள் நுழைவதை மக்கள் தடுத்துள்ளனர். நாங்கள் தி.மு.க மற்றும் இடதுசாரிகளுடன் இணைந்து முற்போக்குக் கூட்டணியில் போட்டியிட்டோம்.

தற்போது எங்க கூட்டணி தோற்றுவிட்டது. த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அவர்களும் பா.ஜ.க-வுடன் இணையவில்லை. பா.ஜ.க-வின் வெறுப்பு அரசியலை அவர்களும் வீழ்த்தியுள்ளனர். எனவே, தமிழகத்தில் மதச்சார்பற்ற களம் மீண்டும் கிடைத்துள்ளதாகக் கருதுகிறோம். அதை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்காக காங்கிரஸ் எத்தகைய முடிவையும் எடுக்கும். எம்.எல்.ஏ-க்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையும் இது குறித்து இறுதி முடிவை எடுக்கும்.

கேள்வி: த.வெ.க-வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தால், அது தி.மு.க-வுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தாதா?

பதில்: நாங்க பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராகக் கொள்கை ரீதியாகப் போராடுகிறோம். கேரளாவில் கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸும் மோதிக்கொள்கிறார்கள். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் காங்கிரஸும் எதிரெதிராக நிற்கின்றன. ஆனால் தேசிய அளவில் நாங்க பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்றாக இருக்கிறோம். அதேபோல் தான் தமிழகத்திலும். பா.ஜ.க-வை எதிர்த்துப் போட்டியிட்டு, அவர்களுடன் எந்தப் புரிந்துணர்வும் வைத்துக்கொள்ளாத ஒரு புதிய கட்சியை (த.வெ.க) நாம் பார்க்கிறோம். இத்தகைய மதச்சார்பற்ற அரசியலை அனைத்து சக்திகளும் ஆதரிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்தியா முழுவதும் ராகுல் காந்தி பா.ஜ.க-வை எதிர்த்துப் போராடி வருகிறார். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஜனநாயகத்தைத் திருட முயன்ற போது நாங்க திரிணாமுல் காங்கிரஸை ஆதரித்தோம். இது குறுகிய அரசியல் அல்ல. வெறுப்பு அரசியலையும் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளை தடுப்பதே எங்கள் முக்கிய நோக்கம்.

கேள்வி: அப்படியானால் தேசிய அளவில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியும், மாநில அளவில் மதச்சார்பற்ற தன்மையைக் காக்க த.வெ.க-வுக்கு ஆதரவு என்பதும் சாத்தியமா?

பதில்: அதுகுறித்து காங்கிரஸ் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும். கேரளா மற்றும் வங்காள உதாரணங்களை நான் சொன்னேன். மாநில அளவில் எங்களுக்குள் அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் டெல்லியில் (தேசிய அளவில்) நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். அதே போல் தமிழகத்திலும் ஒரு புதிய கட்சி அந்த இடத்தைப் பிடித்துள்ளது. நாம் அவர்களைச் சந்தேகிக்கத் தேவையில்லை. எந்த விலையைக் கொடுத்தாவது மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாக்க வேண்டும், கொள்கையில் சமரசம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/manickam-tagore-interview-congress-was-divided-over-alliance-with-vijay-party-president-took-final-call-11804970