ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவை பொதுத் தே
ர்தல் நடைபெற இருப்பதாலே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வரியை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வரிக்கு பல்வேறு தரப்புகளிடமிருந்து குறிப்பாக தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில், அத்திட்டத்தை திரும்ப பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று அறிவித்தார்.
இந்தியாவில் அஸ்ஸாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தல்களை மனதில் கொண்டே மத்திய அரசு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வரியை திரும்ப பெற்றுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தேர்தல் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களிலும் மத்தியில் ஆளும் பாரதீ.ய ஜனதா கட்சி ஆளும்கட்சியாக இல்லை. அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் அக்கட்சி ஆட்சியை பிடிப்பதற்கான சாத்தியகூறுகள் இருக்கின்றன.
மேற்குவங்கத்தில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அவரது ஆட்சியை அகற்றுவதற்கு இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள நிலையில், பாரதீய ஜனதா கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற விரும்புகிறது.
அதேபோல, கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் கணிசமான வெற்றிகளை பெற்ற பாரதீய ஜனதா கட்சி, அதை பேரவை பொதுத் தேர்தலில் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரையில் கடந்த இரு பொதுத் தேர்தல்களிலும் அக்கட்சிக்கு பேரவையில் ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. நடைபெறவிருக்கும் தேர்தலில் சில இடங்களிலாவது வெற்றி பெறுவதற்கு தகுந்த கூட்டணி கட்சியை தேடி வருகிறது.
புதுச்சேரியிலும் பாரதீய ஜனதா கட்சிக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஆதரவு இல்லை.
இந்நிலையிலேயே மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வரியை ரத்து செய்துள்ளது. பொதுமக்களிடையே குறிப்பாக தொழிலாளர்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பை சமாளிக்கும் வகையிலும், பேரவைத் தேர்தல்களில் இப்பிரச்னை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலுமே இ.பி.எப். வரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதேபோல ஆண்டுதோறும் வழங்கப்படும் 12 மானிய சமையல் எரிவாயு உருளைகளை 10 ஆக குறைப்பதற்கு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரையையும், மத்திய அரசு அமல்படுத்தவில்லை.