திங்கள், 14 மார்ச், 2016

''நுாலக திறப்பாளர்: செம்பருத்தி'



தமிழகத்தில் இப்படியும் ஒரு எம்.எல்.ஏ!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ சிவசங்கர், தனது தொகுதியில் நடக்கும் திருமணங்கள், துக்க நிகழ்வுகள் என தொகுதிக்குள் சகஜமாக வலம் வருவார். இப்படி இரண்டு வருடங்களுக்கு முன், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட கொள்ளப்பாடி கிராமத்திற்கு மக்களை சந்திக்க சென்றுள்ளார்.
அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் கிளம்பும்போது, ''சார்'' என ஒரு சிறுமியின் குரல் கேட்டு திரும்பினார். அப்போது 8-ம் வகுப்பு படித்து வந்த செம்பருத்தி என்ற அந்த மாணவி, எம்.எல்.ஏ சிவசங்கரிடம், ''' சார்.. எங்க ஊருக்கு ஒரு லைப்ரரி கட்டிக் கொடுங்க சார்'' என்று கேட்டுள்ளார்..

வியப்படைந்த எம்எல்ஏ, 'அந்த பொண்ண வரச்சொல்லுங்க' என்று வரச்சொல்லி, 'எல்லாரும் சொந்த பிரச்னையே சொல்லிக்கிட்டு இருக்காங்க.. நீ தான் பொது பிரச்னையை சொல்ற'' என்று மாணவி செம்பருத்தியை உற்சாகப்படுத்தி விட்டுச் சென்றார்.
அடுத்த கொஞ்ச நாட்களில் எம்எல்ஏ தொகுதி நிதி ஒதுக்கீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் செலவில் கொளப்பாடியில் நுாலகக் கட்டிடம் கட்டப்பட்டது.
நுாலக திறப்பு விழாவின் போது கொளப்பாடி கிராமமே ஒன்று திரண்டு நின்றது. நுாலகத்தை திறந்து வைக்கப்போதும் 'விஐபி' யார் என்பதை அறியும் ஆர்வமும் அங்கு அலைமோதியது.
வாசலில் இருந்த கல்வெட்டினை மூடியிருந்த துணியை விலக்கும் போது பலருக்கும் ஆனந்த அதிர்ச்சி. காரணம், ''நுாலக திறப்பாளர்: செம்பருத்தி'' என்று கல்வெட்டில் செதுக்கப்பட்டு இருந்தது.
''இங்கு இந்த நுாலகம் வருவதற்கு ஒரே காரணம் மாணவி செம்பருத்திதான்.. ஆகவே அவரைவிட சரியான திறப்பாளர் யாரும் இருக்கமுடியாது என்பதால் இந்த முடிவு'' என்று எம்எல்ஏ., சிவசங்கர் பேசும் போது கூட்டத்தில் எழுந்த கைதட்டல் அடங்க வெகு நேரமானது.