திங்கள், 21 மார்ச், 2016

‘பாரசிட்டமால் மருந்து பயனற்றது’- ஆய்வில் தகவல்


paraceமூட்டு வலி பாதிப்பு உள்ளவர்கள், பாரசிட்டமால் மருந்தை பயன்படுத்துவது வீண் என்றும், மூட்டு வலியை குணப்படுத்தும் திறன் அதற்கு இல்லை என்றும், ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 18 சதவீதம் பேரும், ஆண்களில் 9.6 சதவீதம் பேரும் ஆர்த்தரைட்டிஸ் எனப்படும் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டு வலி உடலின் இயக்கத்தை பாதிப்பதால், உடல் பருமன், இருதய நோய், சர்க்கரை நோய் மற்றும் பொதுவான உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. 
 
இவர்கள் பலரும் பாரசிட்டமால் மருந்தை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மூட்டுவலி குணப்படுத்துவதில், பாரசிட்டமால் உரிய பயன் அளிக்கிறதா என்பது பற்றி, ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள பெர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். 
இதற்காக, கடந்த 1980ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரையான காலத்தில், மூட்டுவலி பாதித்த 58,556 நோயாளிகளின் விவரங்களை தொகுத்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், இதர மருந்துடன் ஒப்பிடும்போது, பாரசிட்டமால் மருந்தை பயன்படுத்தியோருக்கு, மூட்டு வலி குறைந்து, உடலியக்கம் சற்று மேம்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. 
எனினும், மருத்துவ ரீதியாக முழுமையாக மூட்டு வலியை குணப்படுத்துவதில் பாரசிட்டமால் மருந்துக்கு எந்த விதப் பங்கும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மூட்டு வலிக்கு பாரசிட்டமால் போன்ற ஸ்டீராய்டு அல்லாத மருந்துகளைக் குறுகிய காலத்திற்கே பயன்படுத்த முடியும். தொடர்ச்சியாக அதனை பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.