செவ்வாய், 22 மார்ச், 2016

பள்ளி மாணவிகளை துரத்தும் நவீன வில்லன்கள். பெற்றோர்களே அவதானம்.!


w8ABRbpcUntitled-1வேலூர் மற்றும் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளிகளுக்கு அனுப்பிய தங்களது மகள்கள் மீண்டும் நல்லபடியாக மாலை வீடு திரும்ப வேண்டுமே என்ற பரிதவிப்பில் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.
ஏனெனில், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 13 முதல் 17 வயது வரையிலான ஏராளமான பள்ளி மாணவிகளை, அந்தந்த பகுதியில் வேலைவெட்டி இல்லாமல் நண்பர்களின் வாகனங்களில் சுற்றித் திரியும் ‘ரோடு சைடு ரோமியோ’க்கள், ‘காதல்’ என்ற போர்வையில் நவீன வில்லன்களாக மடக்கி வருகின்றனர்.
அவர்களின் ஆசைவார்த்தைகளை நம்பி, காலையில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு யூனிபார்முடன் பள்ளிக்கு கிளம்பும் மாணவிகளை, இந்த நவீன வில்லன்கள் பள்ளி அருகே அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாள்தோறும் வாகனங்களில் நின்றுகொண்டு, அம்மாணவிகளுக்கு பல்வேறு பரிசுகளை வழங்கி அசத்துகின்றனர்.
இதனால் அந்த மாணவிகள் அந்நபர்கள் மீது ‘ஈர்ப்பு’ கொள்கின்றனர். அவ்வாறு ஈர்ப்பு கொண்ட பள்ளி மாணவிகளை, அதே சீருடையுடன் தங்களது மோட்டார் பைக்கில் ஏற்றிக்கொண்டு, பகல் நேரங்களில் வேலூர் கோட்டை பூங்கா, அமிர்தி வனப்பகுதி, ஏலகிரி மலை, மற்றும் பாலாறு உள்ளிட்ட ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு கொண்டு சென்று, சில்மிஷங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒருசில வில்லன்கள், சில்மிஷங்களை மாணவிகளுக்குத் தெரியாமலே தங்களது செல்போனில் படம்பிடித்து விடுகின்றனர்.
பின்னர், செல்போனில் பதிவான படங்களை வைத்து அம்மாணவிகளை நவீன வில்லன்கள் பயமுறுத்தி, நாள்தோறும் தாங்கள் சொல்லும் இடங்களுக்கு வரவழைத்து, மாணவிகளிடம் பல்வேறு பாலியல் அத்துமீறல்களை செய்து வருகின்றனர்.
இதை கண்காணிக்க போலீசாரின் ரோந்து பணி இருப்பதில்லை. இதேபோல் வேலூர் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளிலும் போலீசாரின் ரோந்து பணி முக்கிய சாலைகளில் மட்டுமே உள்ளது. அப்பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் தங்களிடம் சிக்கும் பள்ளி மாணவிகளை அந்த நவீன வில்லன்கள் சாலையிலேயே நடத்தும் பாலியல் அத்துமீறல்கள் நம் கண்களை கலங்க வைக்கின்றன.
இதுகுறித்து ஒருசில பெண் மனோதத்துவ நிபுணர்களிடம் விளக்கம் கேட்டோம்.
‘பொதுவாக 13 முதல் 17 வயது வரையுள்ள பெண்கள், தாங்கள் விரும்பும் நவீன செல்போன் உட்பட அனைத்து பொருட்களையும் வாங்க வேண்டும் என்ற ஒருவித ஈர்ப்பு இருக்கும். அதை பெற்றோர் வாங்கிக் கொடுக்க மறுக்கும்போது, தனக்கு அப்பொருளை வாங்கிக் கொடுக்கும் ஏதோ ஒரு வாலிபர்மேல் ‘ஈர்ப்பு’ வரும்.
அந்த வாலிபர் எப்படிப்பட்டவர், அவர் படிக்கிறாரா அல்லது வேலை செய்கிறாரா, இப்பொருளை எப்படி வாங்கி தந்தார் என்பதை எல்லாம் அப்பெண்கள் யோசிப்பதில்லை. விரைவில் அந்த வாலிபரின் காதல் வலையில் சிக்குகின்றனர். அவர்களுடன் பூங்கா, சினிமா என பல்வேறு இடங்களுக்கு சுற்றுகின்றனர்.
இதேபோல், பள்ளி படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் இளஞ்சிறுமிகளும் இத்தகைய வாலிபர்களிடம் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். அவர்களை வைத்து, மற்ற பள்ளி மாணவிகளையும் அந்த நபர்கள் மடக்கி, தங்களது ஆசைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர்.
இதனால் பல இளஞ்சிறுமிகளும் பள்ளி மாணவிகளும் தங்கள் படிப்பையும் வாழ்வையும் இழந்து வருகின்றனர். தங்களிடம் சிக்கிய பள்ளி மாணவிகள், தன்னுடன் சேர்ந்திருக்கும் காட்சிகளை அந்த வாலிபர் ரகசியமாகப் படம்பிடித்து, அதை காட்டி பயமுறுத்தும்போதுதான் இப்பிரச்னை சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு தெரியவருகிறது. அதன்பின் அவர்கள் அலறி பிடித்து காவல்துறையிடம் கூறி நடவடிக்கை எடுப்பார்கள்.
அல்லது, தங்கள் குடும்பத்தோடு வேறிடங்களுக்கு இடம் மாறி செல்வார்கள். இன்னும் பல கொடுமைகளும் நடந்தேறும்.இப்பிரச்னைகளைத் தீர்க்க, ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசவேண்டும்.
அவர்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். அவர்களுக்கு இந்த வயதில் ஏற்படும் ஈர்ப்பினால் நிகழும் அபாயங்கள் குறித்தும் விளக்க வேண்டும்.
பள்ளி மாணவிகளை பல்ேவறு வகைகளில் மிரட்டி பலாத்கார முயற்சிகளில் ஈடுபடும் கொடூரர்கள் மீது, ஹீரோவைப் போல் காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே சமயம், அம்மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை பாழாகாத வகையில் போலீசார் செயல்பட வேண்டும்’ என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.இதுபோன்ற சம்பவங்கள் மாவட்டத்தில் மட்டுமல்ல மாநிலம் முழுவதும் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது.
இதை தடுக்க காவல்துறையினர் உடனடியாகசெயல்பட்டு இதுபோன்ற ரோடு சைடு ரோமியோக்களை பிடிக்க கடும் நடவடிக்கை எடுக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகள், முக்கிய வீதிகளுடன் அந்தந்தப் பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லாத தெருக்களிலும் உடனடியாக தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.