வழிபாட்டுத் தலங்கள், கோயில்களுக்கு அருகிலுள்ள மதுபானக் கடைகள் கண்டறியப்பட்டு, ஓராண்டுக்குள் இடம் மாற்றப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்தது.
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்களிலிருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு வெளியே மதுபானக் கடைகள் இருக்க வேண்டும். மேலும், கடைகள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள், பார்கள் ) விதிகள் 2003, விதி 8 (1) கூறுகிறது.
நகர எல்லைகளுக்குள்பட்ட பகுதிகளில் 50 மீட்டருக்கு வெளியேயும், மற்ற பகுதிகளில் 100 மீட்டருக்கு வெளியேயும் கடைகள் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வணிகப் பகுதிகளுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த விதியை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவித்து, தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி ஏ.நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் குறித்து கணக்கெடுக்க 6 மாத காலம் தேவைப்படும். அதன்பிறகு, அவற்றை இடம்மாற்ற 6 மாத காலம் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.