பக்ரித் திருநாளான செப்டம்பர் 13ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்த அம்மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அம்மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில், பக்ரித் திருநாளில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினத்தில் ஸ்ரீநகரில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடவும் பிரிவினைவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, செப்டம்பர் 13ஆம் தேதி வன்முறை ஏற்படாமல் இருக்க ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
காஷ்மீரில் ஹிஸ்புல் முகாஜிதின் தீவிரவாதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. ஜூலை 8ஆம் தேதி முதல் 60 நாள்களுக்கு மேலாக காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது.
source: news 18