திங்கள், 26 செப்டம்பர், 2016

திருவாரூர் - கருப்பூரில் கெயில் குழாய் பதிப்பு வேலைகளால் விபத்து!







திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அருகே கருப்பூரில் உள்ள South Indian Edible Oil எனப்படும் தனியார் பாமாயில் சுத்தம் செய்யும் தொழிற்சாலை வளாகத்துக்குள் நடத்தப்பட்ட கெயில் குழாய் வெல்டிங் வேலை காரணமாக இன்று (25-09-2016), நண்பகல் 12.15 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டது. மிகப்பெரும் விபத்து நிகழ்ந்து பேரழிவு ஏற்படாமல் நல்லவேளையாகத் தீயணைக்கப்பட்டது.
இந்த பாமாயில் சுத்தம் செய்யும் தொழிற்சாலையின் கழிவுகள் வயலில் கொட்டப்பட்ட பிரச்சினையால், தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டு ஆலையின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்குடியிலிருந்து கருப்பூர் வந்து சேரும் கச்சா எண்ணெய் குழாய்கள் அங்கிருந்து நரிமணம் நோக்கி செல்கின்றன. இதற்காக 12 அங்குல விட்டமுள்ள குழாய்களை கெயில் நிறுவனம் இரகசியமாக பதித்து வந்த நிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு களம் இறங்கி தோழமை அமைப்புகளுடன் இணைந்து இந்த குழாய் பதிப்புகளை தடுத்து நிறுத்தியது. தோழர்கள் நவாஸ், கபீர், ஹாஜா, ஹுசைன், மு. செ. பாண்டியன், ஜமாத் தலைவர் நிசாமுதீன் முக்கிய பங்குவகித்தனர்.
நம்முடைய தோழர்கள் தடுத்து நிறுத்தியிருந்த குழாய்ப் பதிப்பை ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனம் இரகசியமாக நடத்த முற்பட்டது. பாமாயில் நிறுவனத்தின் ஊடாக செல்லும் குழாய்களை எவ்வித தொல்லையும் இன்றி மறைவாக செய்து முடித்துவிடலாமென்றும் பிற வேலைகளை வழக்கம் போல நள்ளிரவில் நடத்திக்கொள்ளலாம் என்று கருதி கெயில் நிறுவனம் வெல்டிங் வேலையை செய்த போது விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவிய நிலையில் வடஇந்திய தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர் அந்தப் பகுதியைச் சேர்ந்த, கருப்பூர், சேமங்கலம், நெடுங்குடி, அலிவலம் மக்கள் அச்சத்துடனும், மனக்குமுறலுடனும் தொழிற்ச்சாலைப் பகுதியில் திரண்டனர்.
தீ விபத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்களும், செடிகளும் பற்றி எரிந்துவிட்டன. விரைந்து வந்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் தீயைப் போராடி அணைத்தன. பாமாயில் வளாகத்தில் உள்ள எரிவாயு கலத்திலோ, கெயில் எரிவாயுக் குழாயிலோ அல்லது இரசாயனப் பொருள் சேமிப்பகத்திலோ பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், இந்த விபத்து மிகப்பயங்கரமானதாக இருந்திருக்கும்.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, மக்கள் வாழும் பகுதியில் எண்ணெய்-எரிவாயுக் குழாய் துரப்பண வேலைகளையோ, ஓ.என்.ஜி.சி., கெயில் கிடைமட்ட குழாய்ப் பதிப்பு வேலைகளையோ நடத்தக் கூடாதென்று தொடர்ந்து கூறி வருகிறது. இப்போது குழாய் பதிப்புகளை தடுத்து நிறுத்தா விட்டால் எதிர்காலத்தில் பேரழிவுகளை நாம் சந்திக்க நேரிடும். நிகழ்ந்திருக்கும் விபத்து நமக்கு ஒர் எச்சரிக்கை!
- பேராசிரியர் த. செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு.
Source: FB மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு.