புதன், 28 செப்டம்பர், 2016

உள்ளாட்சி முறை.

உச்சத்திலுள்ள ஒரு சிலரின் கரங்களில் அதிகாரங்கள் குவிந்து கிடப்பதை மாற்றியமைத்து அதிகாரப் பரவல் முறையை அமல்படுத்துவதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் உள்ளாட்சி முறை.
உள்ளாட்சி அமைப்புகள் படிப்படியாக வளர்ச்சி பெற்று அதன் முழு வீச்சை எட்டுகிறபோது அது மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உள்ளாட்சி முறையில் அடிமட்டத்திலிருந்து திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அத்திட்டங்கள் மக்கள் மத்தியிலிருந்து முகிழ்த்து எழுகின்றன. மக்களிடமிருந்து சென்று சேருகிற வரிப்பணம் அரசு கஜானாவுக்குச் சென்று மீண்டும் இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்குத் திருப்பிவிடப்படுகின்றன.
அரசுத்திட்டத்தில் மக்கள் பங்களிப்பது என்பதிலிருந்து, மக்கள் திட்டத்தில் அரசு பங்களிப்புச் செய்கிறது என்ற நிலைக்கு மாறவேண்டும்
"நான் பல ஆண்டுகளாக கட்சியில் உங்கள் விசுவாசமிக்க தொண்டனாக இருக்கிறேன். தொழில் சரியாக அமையவுமில்லை. வருகிற உள்ளாட்சித் தேர்தலில் ஏதாவது ஒரு பதவியைப் பெற்றுக்கொடுத்தால் நான் பிழைத்துக்கொள்வேன்' என்று பலர் முன்னிலையில் பகிரங்கமாக கட்சித் தலைவர்களிடம் கேட்பதும் கட்சித் தலைமையும் அவரை வேட்பாளராகத் தேர்வு செய்வதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.
ஈரத்துணியைப் போர்த்தி ஓசைப்படாமல் கோழி அறுக்கப்படுவதுபோல ஜனநாயகம் இதன் மூலம் அமைதியாகப் படுகொலை செய்யப்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கத்தான் வேண்டுமா?
புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆளும் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால்தான் மக்கள் நலத்திட்டங்கள் உங்களை வந்து சேரும்.நாங்கள் தோல்வியடையும் இடங்களில் திட்டங்களின் பலன்கள் அப்பகுதி மக்களுக்குச் சென்றடையாது என்று பகிரங்கமாக தமிழகமெங்கும் பேசி வருகின்றனர். இது மக்களின் மனசாட்சிப்படி வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் முயற்சியாக இருப்பதை அறிய வைத்தோமா?
உள்ளாட்சித் தேர்தல்களால் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். இல்லையென்றால், ஊழல்தான் பரவலாக்கப்படும் என்பது நினைவிருக்கட்டும்.
எனவே, மக்களின் அதிகார பரவலாக்கத்தினை நோக்கி நமது களப்பணியினை ஆரம்பிப்போம். ஜனநாயகத்தைப் பாதுகாக்கிற கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை அனைத்து மக்களும் உணர வைப்போம்.
உச்சத்திலுள்ள ஒரு சிலரின் கரங்களில் குவிந்துள்ள‌ அதிகாரங்களை மாற்றி, அடித்தட்டு மக்களின் கைகளில் அதனை பகிர்ந்தளிக்க முனைவோம்.
ஆர்.சையத் பஷீர் (நிறுவன தலைவர்)
ஊழலுக்கு எதிரான இயக்கம்
(Anti Corruption Foundation)